இடங்கணசாலை நகராட்சியில் அடிப்படை வசதிகள் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

இடங்கணசாலை நகராட்சியில் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். மேலும் பா.ம.க. கவுன்சிலர்களும் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-12-22 21:49 GMT

இளம்பிள்ளை:

அடிப்படை வசதிகள்

இடங்கணசாலை நகராட்சிக்குட்பட்ட வார்டுகளில் அடிப்படை வசதிகள் செய்து தருவதில் தாமதம் செய்வதாக குற்றச்சாட்டு எழுந்தது. எனவே வார்டு பகுதிகளில் அடிப்படை வசதிகளை செய்து தரக்கோரி நேற்று பொதுமக்கள் இடங்கணசாலை நகராட்சி அலுவலகம் முன்பு மரத்தை வெட்டிப்போட்டு சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் இளம்பிள்ளை இருந்து கே.கே.நகர் செல்லும் சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து தகவல் அறிந்த மகுடஞ்சாவடி போலீஸ் இன்ஸ்பெக்டர் வெங்கடேஷ் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர் ரகு மற்றும் போலீசார் விரைந்து வந்து சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது அடிப்படை வசதி செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

கவுன்சிலர்கள் தர்ணா

இதனிைடயே இடங்கணசாலை நகராட்சி கூட்டம் தலைவர் கமலக்கண்ணன் தலைமையில் நடந்தது. கூட்டத்துக்கு துணைத்தலைவர் தளபதி முன்னிலை வகித்தார். இதில் கலந்து கொண்ட பா.ம.க. கவுன்சிலர்கள் தங்கள் வார்டு பகுதியில் சாக்கடை வசதி, தெருவிளக்கு, குடிநீர் தேவைகள் குறித்த பணிகளை தாமதப்படுத்துவதாகவும், புறக்கணிப்பதாகவும் கூறினார்கள். மேலும் பா.ம.க. கவுன்சிலர்கள் மாதேஷ், மூர்த்தி, ராஜேந்திரன், மகாலிங்கம், அமுதாராஜா, சரஸ்வதிபூபதி ஆகியோர் கூட்டத்தில் இருந்து வெளிநடப்பு செய்தனர். தொடர்ந்து அவர்கள் நகராட்சி அலுவலக வளாகத்தில் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதைத்தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட பா.ம.க. கவுன்சிலர்களிடம் நகராட்சி தலைவர் கமலக்கண்ணன் பேச்சுவார்த்தை நடத்தினார். மேலும் குறைகள் குறித்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தார். அதன் பேரில் கவுன்சிலர்கள் கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்