கூட்டுறவு கடன் சங்கத்தை முற்றுகையிட்ட பொதுமக்கள்

அடகு வைத்த நகைகளை திரும்ப தரக்கோரி, கூட்டுறவு கடன் சங்கத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2023-04-12 15:20 GMT

தங்க நகைகள் கையாடல்

வடமதுரை அருகே உள்ள வெள்ளபொம்மன்பட்டியில், தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு அப்பகுதியை சோ்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் தங்க நகைகளை அடகு வைத்துள்ளனர்.

இந்த கடன் சங்கத்தில் செயலாளராக பணிபுரிந்தவர், பொதுமக்கள் அடகு வைத்த ரூ.30 லட்சம் தங்க நகைகளை கையாடல் செய்து, அதற்கு பதில் கவரிங் நகைகளை லாக்கரில் வைத்து முறைகேட்டில் ஈடுபட்டதாக கூறப்படுகிறது. இதனையடுத்து அவர் தலைமறைவாகி விட்டார். அவரை பணியிடை நீக்கம் செய்து அதிகாரிகள் உத்தரவிட்டனர்.

பொதுமக்கள் போராட்டம்

கூட்டுறவு கடன் சங்கத்தில் அடமானம் வைத்த பொதுமக்கள், தங்களது நகைகளை திரும்பி தரக்கோரி, கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, நகைகளை ஆய்வு செய்து திருப்பி தர நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் உறுதி அளித்தனர்.

ஆனால் 6 மாதங்கள் கடந்த நிலையில், நகைகளை இன்னும் திருப்பி கொடுக்கவில்லை. இதனை கண்டித்து கடந்த பிப்ரவரி மாதம், பொதுமக்கள் கடன் சங்கத்தை முற்றுகையிட்டு மீண்டும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கடன் சங்கம் முற்றுகை

அப்போது பேச்சுவார்த்தை நடத்திய அதிகாரிகள், இன்னும் 15 நாட்களுக்குள் கோர்ட்டின் மூலம் நகை ஒப்படைக்கப்படும் என்றனர். அதிகாரிகள் உறுதி அளித்து 2 மாதங்கள் உருண்டோடி விட்ட நிலையில், தற்போது வரை யாருக்கும் நகைகள் வழங்கப்படவில்லை.

இந்தநிலையில் கடன் சங்கத்தை முற்றுகையிட்டு பொதுமக்கள் நேற்று திடீர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, தாங்கள் அடகு வைத்த நகைகளை திரும்ப தர வேண்டும். கையாடல் செய்த முன்னாள் செயலாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர்.

பேச்சுவார்த்தை

இதுகுறித்து தகவல் அறிந்த மாவட்ட துணை பதிவாளர் பழனிச்சாமி மனோகரன், விசாரணை அதிகாரி செல்வராஜ், கூட்டுறவு சார்பதிவாளர் அந்தோணிராஜா, வடமதுரை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜோதிமுருகன் ஆகியோர் சம்பவ இடத்துக்கு வந்து பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது, இதுதொடர்பாக ஒரு குழு அமைக்கப்பட்டு வருகிற 18-ந்தேதி (செவ்வாய்க்கிழமை) தாங்கள் அடகு வைத்த நகைகள் பொதுமக்களுக்கு காட்டப்படும். பின்னர் சென்னையில் நடைபெறும் விசாரணை முடிந்தபிறகு பொதுமக்களிடம் நகைகள் ஒப்படைக்கப்படும் என்றனர். இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்