திருடன் என நினைத்து வாலிபரை தாக்கிய பொதுமக்கள்-போலீஸ் விசாரணை
திருடன் என நினைத்து வாலிபரை பொதுமக்கள் தாக்கிய சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
அன்னதானப்பட்டி:
சேலம் தாதகாப்பட்டி செல்லக்குட்டிக்காடு பகுதியை சேர்ந்தவர் குணசேகரன் (வயது 29). இவர் நேற்று முன்தினம் நள்ளிரவு தாதகாப்பட்டி கேட், காமராஜர் நகர் பகுதியில் உள்ள தெருக்களில் சுற்றி திரிந்தார். இதைப்பார்த்து சந்தேகமடைந்த அப்பகுதி பொதுமக்கள் அந்த நபர், மோட்டார் சைக்கிள் திருட வந்ததாக நினைத்து கொண்டு, அவரை சரமாரியாக தாக்கியதாக தெரிகிறது.
இதில் படுகாயமடைந்த அந்த வாலிபர் மயங்கி விழுந்தார். தொடர்ந்து அவர் சேலம் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்த புகாரின் பேரில் அன்னதானப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.