வள்ளியூரில் 100 ஏக்கரில் சிட்கோ தொழிற்பேட்டை - அமைச்சர் தா.மோ.அன்பரசன்

வள்ளியூரில் 100 ஏக்கரில் சிட்கோ தொழிற்பேட்டை தொடங்கப்படும் என்று அமைச்சர் தா.மோ.அன்பரசன் கூறினார்.

Update: 2022-08-11 20:40 GMT

வள்ளியூர்:

தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் நெல்லை மாவட்டம் வள்ளியூரில் ரூ.52.72 கோடி மதிப்பீட்டில் 504 வீடுகள் கட்டுவதற்காக திட்டம் தயாரிக்கப்பட்டுள்ளது. தலா ரூ.10.46 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்படும் வீட்டிற்கு மத்திய அரசின் மூலம் ரூ.1.50 லட்சமும், மாநில அரசின் மூலம் ரூ.7 லட்சமும் மானியமாக வழங்கப்படுகிறது. பயனாளிகள் சார்பில் ரூ.1.96 லட்சம் பங்களிப்புடன் இத்திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது.

இந்த திட்டத்திற்காக வள்ளியூர் நகர பஞ்சாயத்துக்குட்பட்ட தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் குடியிருப்பு பகுதிக்கு வடக்கு பக்கம் இடம் தேர்வு செய்யப்பட்டு உள்ளது. இந்த இடத்தை சபாநாயகர் அப்பாவு, தமிழக குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஆகியோர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். பின்னர் வள்ளியூரில் அமைந்துள்ள சிப்காட் தொழிற்பேட்டை, டான்சி இடங்களையும் பார்வையிட்டனர். பின்னர் அமைச்சர் தா.மோ.அன்பரசன் நிருபர்களிடம் கூறியதாவது:-

முதல்-அமைச்சரின் கவனத்துக்கு கொண்டு சென்று இந்த பகுதியில் இருக்கின்ற ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் சிப்கோ தொழிற்பேட்டை அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படும். பணகுடி நகர பஞ்சாயத்து பகுதிகளில் ரூ.49.14 கோடி மதிப்பீட்டில் வீடு கட்டும் திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. வள்ளியூரில் அமைந்துள்ள 3.6 ஏக்கர் டான்சி இடத்தில் மூன்று கட்டிடங்கள் உள்ளன. அங்கு தொழில் தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும். வள்ளியூரில் 100 ஏக்கரில் சிட்கோ தொழிற்பேட்டை தொடங்கப்படும். அங்கு படித்த இளைஞர்கள் பயன்பெறும் வகையில் தொழிற்பயிற்சி மையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை மேலாண்மை இயக்குனர் மதுமதி, தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரிய மேலாண்மை இயக்குனர் கோவிந்தராவ், கலெக்டர் விஷ்ணு, மாவட்ட வருவாய் அலுவலர் ஜெயஸ்ரீ, சேரன்மாதேவி உதவி கலெக்டர் ரிஷப், ராதாபுரம் தாசில்தார் யேசுராஜன், வள்ளியூர் நகர பஞ்சாயத்து தலைவர் ராதா ராதாகிருஷ்ணன், துணைத்தலைவர் கண்ணன், செயல் அலுவலர் சுஷ்மா மற்றும் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி மன்ற பிரதிநிதிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்