கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்து கொன்று இருக்கலாம் என்று சந்தேகத்தால் பொதுமக்கள் அச்சம்

காங்கயம் அருகே தோட்டத்தில் கட்டி இருந்த கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்து கொன்று இருக்கலாம் என்று சந்தேகத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளன.

Update: 2023-04-27 16:17 GMT

காங்கயம் அருகே தோட்டத்தில் கட்டி இருந்த கன்றுக்குட்டியை சிறுத்தை கடித்து கொன்று இருக்கலாம் என்று சந்தேகத்தால் பொதுமக்கள் அச்சம் அடைந்துள்ளன.

சிறுத்தை

கூண்டுக்குள் இருக்கும் சிறுத்தையை பார்த்தால் நடுக்கம் வராது. ஆனால் காடுகளில் சிறுத்தைகள் சுதந்திரமாக சுற்றித்திரிவது தெரியவந்தால் யாருக்குத்தான் அச்சம் வராது. அந்த பகுதியில் செல்பவர்கள் சாலையை பார்த்து செல்வார்களோ இல்லையோ, கண்கள் இரண்டும் அங்கும் இங்கும் சுற்றி சுற்றி பார்க்கும். எந்த பகுதிலேயாவது மரக்கிளைகள் அசைகிறதா? உறுமல் கேட்கிறதா? என ஒவ்வொரு அடியையும் பதற்றத்துடன் எடுத்து வைப்போம். அதுபோல் ஊதியூர் பகுதியில் நடக்கிறது. ஊதியூர் வனப்பகுதியில் சிறுத்தை பதுங்கியநாள் முதல் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்களுக்கு தூக்கம் இல்லை.

நாய்களின் எண்ணிக்கை குறைகிறது, கன்றுகுட்டிகளை தூக்கி செல்கிறது, நாய்களை கடித்து குதறுகிறது என தினம் தினம் வரும் தகவலால் அந்தபகுதியில் கிலி ஏற்பட்டுள்ளது. எனவே சிறுத்தையை எப்படியாவது பிடித்து விட வேண்டும் என்று கூண்டுகள் வைத்து, அந்த கூண்டுக்குள் ஆடு, மாட்டுஇறைச்சி வைத்து அந்த கூண்டை வனத்துறையினர் கண்காணித்து வருகிறார்கள். ஆனால் என்னவோ கூண்டுதான் இருக்கிறதே தவிர, கூண்டுக்குள் சிறுத்தை இருந்த பாடில்லை. இதனால் சிறுத்தை இடம் பெயர்ந்ததா? அல்லது அங்கேயே பதுங்கிக்கொண்டதா? குழப்பம் ஏற்பட்டுள்ளது.

கன்றுக்குட்டி

இ்ப்படி ஒவ்வொரு நாளும் அச்சத்துடன் நகர்கிறது. அனைவரும் சிறுத்தை எப்போது சிக்கும்? பயம் எப்போது போகும் என எதிர்பார்க்கிறார்கள். இந்த நிலையில் திடீரென்று காங்கயம் அருகே நாட்டார்பாளையம் பகுதியில் உள்ள பெரியசாமி என்பவரது விவசாய தோட்டத்தில் கடந்த 4 நாட்களுக்கு முன்பு கட்டியிருந்த கன்றுக்குட்டி செத்து கிடந்தது. எனவே சிறுத்தைதான் கன்று குட்டியை கொன்று இருக்கலாம் என்று பொதுமக்களும், விவசாயிகளும் சந்தேகம் அடைந்தனர்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த கன்றுக்குட்டியின் உரிமையாளர் காங்கயம் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தார். உடனே காங்கயம் வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கன்றுக்குட்டியை பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டனர்.

அதன்பின்னர் வனத்துறையினர் கூறியதாவது:-

கன்றுக்குட்டி இறந்து 4 அல்லது 5 நாட்கள் கழித்து பார்த்துள்ளனர். மேலும் கன்றுக்குட்டியின் உடல் பகுதியில் சிறுத்தையின் கால் நகங்களோ அல்லது பற்களின் தடயங்கள் ஏதும் இல்லை. அப்பகுதியில் சிறுத்தையின் கால்தடங்களும் இல்லை. மேலும் கன்றுக்குட்டியின் கால் பகுதியில் சிறிய அளவிலான பற்களின் தாரைகள் உள்ளது.

நாய்கள்

இது நாய்களின் பற்கள் போல் உள்ளது. இது வெறி நாய்கள் தாக்கியதில் உயிரிழந்திருக்கலாம் அல்லது நோய்வாய் பட்டு உயிரிழந்து அதை கன்றுக்குட்டியின் உரிமையாளர் 3 அல்லது 4 நாட்கள் பார்க்காமல் இருந்திருக்கலாம். எனவே வீண் வதந்திகளை நம்ப வேண்டாம். சிறுத்தை வேட்டையாடும்போது தனது உணவை கடித்து பல அடி தூரம் இழுத்து செல்லும். கன்றுக்குட்டியை சிறுத்தை தாக்கியதாக இருந்தால் அங்கு இருந்து வேறு பகுதிக்கு கன்று குட்டியை சிறுத்தை கடித்து இழுத்து சென்று இருக்கும். ஆனால் அப்படி இருக்க வாய்ப்பு இல்லை. எனவே வெறிநாய்கள் கடித்துதான் கன்றுக்குட்டி இறந்திருக்க வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர்கள் தெரிவித்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்