ஈரோடு புனித அமல அன்னை ஆலய தேர்த்திருவிழா கொடிஏற்றத்துடன் தொடங்கியது

ஈரோடு புனித அமல அன்னை ஆலய தேர்த்திருவிழா கொடிஏற்றத்துடன் தொடங்கியது

Update: 2022-12-04 20:37 GMT


ஈரோடு புனித அமல அன்னை ஆலய தேர்த்திருவிழா கொடிஏற்றத்துடன் தொடங்கியது.

அமல அன்னை ஆலயம்

ஈரோடு பன்னீர்செல்வம் பூங்கா அருகே, ஸ்டேட் வங்கி ரோட்டில் புனித அமல அன்னை ஆலயம் உள்ளது. ஏசு கிறிஸ்துவின் தாய் அன்னை மரியாள் பிறவி பாவம் இல்லாமல் உருவானவர். அதை கொண்டாடும் வகையில் ஆண்டு தோறும் டிசம்பர் மாதம் அமல அன்னை திருவிழா கொண்டாடப்பட்டு வருகிறது. அதன்படி ஈரோடு புனித அமல அன்னை ஆலய ஆண்டு தேர்த்திருவிழா நேற்று கொடி ஏற்றத்துடன் தொடங்கியது.

கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் விழாவுக்கு தலைமை தாங்கி சிறப்பு திருப்பலி (பூஜை) நிறைவேற்றினார். தொடர்ந்து அமல அன்னையாக விளங்கும் மாதா உருவம் பதித்த கொடி ஏற்றப்பட்டது. அப்போது மரியாள் புகழ் கோஷத்துடன் பக்தர்கள் ஜெபமாலை பிரார்த்தனையுடன் கரகோஷங்கள் எழுப்பினார்கள்.

சிறப்பு திருப்பலி

நேற்று மாலையில் திருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது. நிகழ்வுகளை ஈரோடு புனித அமல அன்னை ஆலய பங்குத்தந்தையும், ஈரோடு மறை வட்ட முதன்மை குருவுமான ஜான் சேவியர் தலைமையில் உதவி பங்குத்தந்தை நல்ல ஜேக்கப் தாஸ் மற்றும் நிர்வாகிகள் ஒருங்கிணைத்து நடத்தினார்கள். தொடர்ந்து வரும் நாள்களில் தினசரி சிறப்பு நவநாள் பிரார்த்தனைகள் நடைபெறும்.

8-ந்தேதி மாலை 6 மணிக்கு சேலம் மறைமாவட்டம் சங்ககிரி ஆலய பங்குத்தந்தை கிருபாகரன் தலைமையில் சிறப்பு திருப்பலி மற்றும் வேண்டுதல் தேர் பவனி நடைபெறும். 9-ந்தேதி மாலை 6 மணிக்கு சேலம் புனித பிரான்சிஸ் சேவியர் இளங்குரு மடத்தின் உதவி அதிபர் சார்லஸ் தலைமையில் சிறப்பு திருப்பலி, வேண்டுதல் தேர் பவனி நடக்கிறது.

தேர்பவனி

10-ந் தேதி மாலை 6 மணிக்கு கோவை புனித பாத்திமா அன்னை ஆலய பங்குத்தந்தை மரிய ஆண்டனி தலைமையில் சிறப்பு திருப்பலி, வேண்டுதல் தேர் பவனி நடக்க உள்ளது. 11-ந் தேதி தேர்த்திருவிழா கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் காலை 6 மணிக்கு திருப்பலி நடைபெறும். காலை 8 மணிக்கு கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் அமல அன்னையின் ஆடம்பர தேர்த்திருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது.

அன்று மாலை 5.30 மணிக்கு அறச்சலூர் கொமராபாளையம் புனித அந்தோணியார் ஆலய பங்குத்தந்தை கிளாடிஸ் சேவியர் தலைமையில் திருப்பலியும், தொடர்ந்து தேர் பவனியும் நடக்கிறது. கொரோனா காரணமாக கடந்த 2 ஆண்டுகள் தேர்த்திருவிழா ஊர்வலம் நடக்கவில்லை. இந்த ஆண்டு ஈரோட்டின் முக்கிய வீதிகள் வழியாக தேர் பவனி நடைபெற இருக்கிறது.

Tags:    

மேலும் செய்திகள்