கிறிஸ்துமஸ் விழா கொண்டாட்டம்
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.;
வள்ளியூர் (தெற்கு):
நெல்லை, தென்காசி மாவட்டங்களில் பல்வேறு இடங்களில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது.
கலந்தபனை
நெல்லை மாவட்டம் வள்ளியூர் அருகே கலந்தபனையில் அன்பு இல்லம் மற்றும் அமைதி இல்லத்தில் கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. இதையொட்டி கிறிஸ்து பிறப்பு குறித்து கலைநிகழ்ச்சி நடந்தது. கிறிஸ்துமஸ் கேக் வெட்டி சிறுவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து பரிசுகள் வழங்கப்பட்டது.
விழாவில் ராதாபுரம் தாசில்தார் வள்ளிநாயகம், வள்ளியூர் துணை போலீஸ் சூப்பிரண்டு யோகேஷ்குமார், இன்ஸ்பெக்டர் சாகுல் ஹமீது, டி.ஜே.ஆர். கன்ஸ்ட்ரக்சன் உரிமையாளர் தேவேந்திரன், தலைமை ஆசிரியர் கஸ்மீர், ஆசிரியர் ரெக்ஸ், முனைவர் ரெஜினிஸ், ஜெபக்குமார், அருட்சகோதரிகள், கலந்து கொண்டனர். நிகழ்ச்சி ஏற்பாடுகளை நிர்வாகி அருட்தந்தை ரெக்ஸ் செய்திருந்தார்.
ஆலங்குளம்
ஆலங்குளத்தில் நகர காங்கிரஸ் கமிட்டி சார்பில் சமத்துவ கிறிஸ்துமஸ் விழா கொண்டாடப்பட்டது. நகர தலைவர் வில்லியம் தாமஸ் முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி. ராமசுப்பு தலைமையில் இந்து, கிறிஸ்தவர், இஸ்லாம் மதங்களை சேர்ந்த முக்கிய பிரமுகர்கள் முன்னிலையில் கிறிஸ்துமஸ் கேக் வெட்டி பொதுமக்களுக்கு வழங்கினர்.
நிகழ்ச்சியில், காங்கிரஸ் முன்னாள் நகர தலைவர் செல்லையா, காங்கிரஸ் மூத்த தலைவர் ஆலடி சங்கரையா, முன்னாள் மாவட்ட கவுன்சிலர் வைகுண்டராஜா, வழக்கறிஞர் பிரிவு மாநில துணை தலைவர் பால்ராஜ் உள்பட பலர் கலந்துகொண்டனர். முன்னதாக காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது.
ஆழ்வார்குறிச்சி
ஆழ்வார்குறிச்சி குட்ஷெப்பேடு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள் சிவசைலத்தில் உள்ள அவ்வை ஆசிரமத்தில் குழந்தைகளோடு இணைந்து கிறிஸ்துமஸ் விழாவை கொண்டாடினர். பள்ளி முதல்வர் சரவணன் வரவேற்றார். ஆசிரம செயலாளர் ஸ்ரீரங்கம் வாழ்த்துரை வழங்கினார்.
குழந்தைகளுக்கு இனிப்புகள் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை பள்ளி தலைமை ஆசிரியர் நாகூர் மீராள் மற்றும் ஆசிரியர்கள் செய்திருந்தனர்.
களக்காடு
களக்காடு கிறிஸ்தவ தேவாலயங்களில் கிறிஸ்துமஸ் சிறப்பு பிரார்த்தனை அதிகாலை முதலே நடைபெற்றது. அனைத்து தேவாலயங்களிலும் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு நட்சத்திர விளக்குகள் வரிசையாக தொங்கவிடப்பட்டிருந்தன. களக்காடு புதுத்தெரு ஏ.ஜி. சபையில் அம்பை மண்டல தலைமை போதகர் தங்கமணி தலைமையில் அதிகாலை 3.30 மணி முதல் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.
அதேபோன்று களக்காடு புதுத்தெரு சி.எஸ்.ஐ. தேவாலயத்தில் சேகர குருவானவர் சந்திரகுமார் தலைமையில் இறை செய்தி வழங்கினார். கோவில்பத்து சி.எஸ்.ஐ. நியூ சர்ச்சில் சபை ஊழியர் சுஜித் முன்னிலையில் நெல்லை திருமண்டல பணி நிறைவு பெற்ற மூத்த குருவானவர் பில்லி தேவ செய்தி வழங்கினார். முடிவில் அனைவருக்கும் கிறிஸ்துமஸ் கேக் வழங்கப்பட்டது. ஒருவருக்கொருவர் கிறிஸ்துமஸ் வாழ்த்துக்களை பகிர்ந்து கொண்டனர். நிகழ்ச்சியில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.