கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு கடைபிடிப்பு
மதுரையில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு கடைபிடித்தனர்.;
மதுரையில் உள்ள தேவாலயங்களில் கிறிஸ்தவர்கள் குருத்தோலை ஞாயிறு கடைபிடித்தனர்.
குருத்தோலை ஞாயிறு
கிறிஸ்தவர்கள் கடந்த பிப்ரவரி மாதம் 22-ந் தேதி சாம்பல் புதன் முதல் தொடங்கி தவக்காலம் கடைப்பிடித்து வருகிறார்கள். தவக்காலத்தின் இறுதி வாரமாக, புனித வாரம் கடைபிடிக்கப்படுகிறது. அதன்படி, ஏப்ரல் 2-ந்தேதி குருத்தோலை ஞாயிறு தொடங்கி 9-ந்தேதி ஈஸ்டர் வரை புனித வாரமாக கடைபிடிக்கப்படுகிறது.
புனித வாரத்தின் முதல் நாளான நேற்று குருத்தோலை கடைபிடிக்கப்பட்டது. அதன்படி, கிறிஸ்தவர்கள் அனைவரும் ஆலயங்களுக்கு அருகில் உள்ள பகுதிகளில் இருந்து கையில் குருத்தோலைகளை ஏந்தியபடி ஓசன்னா கீதம் பாடி பவனியாக ஆலயம் வந்தடைந்தனர். அங்கு சிறப்பு திருப்பலிகள் மற்றும் ஆராதனைகள் நடைபெற்றது.
குறிப்பாக, மதுரையில் கீழவாசல் தூய மரியன்னை பேராலயம், புதூர் புனித லூர்து அன்னை ஆலயம், டவுன்ஹால் ரோடு புனித ஜெபமாலை அன்னை ஆலயம், ஞான ஒளிவுபுரம் புனித வளனார் ஆலயம், பாஸ்டின் நகர் தூய பவுல் ஆலயம், அஞ்சல் நகர் தூய சகாய அன்னை ஆலயம், செங்கோல் நகர் கிறிஸ்து அரசர் ஆலயம் உள்ளிட்ட அனைத்து கத்தோலிக்க தேவாலயங்கள் மற்றும் சி.எஸ்.ஐ. ஆலயங்கள் மற்றும் சபைகள் அனைத்திலும் குருத்தோலை ஞாயிறு கடைபிடிக்கப்பட்டது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
ஈஸ்டர் பண்டிகை
இந்த நிகழ்ச்சி குறித்து கிறிஸ்தவர்கள் கூறுகையில், ``இந்த வாரம் முழுவதும் புனித வாரமாக கடைபிடிக்கிறார்கள். புனித வாரத்தின் 2-வது முக்கிய நிகழ்வாக வருகிற 6-ந்தேதி புனித வியாழன் கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய நாளில் இயேசு கிறிஸ்து தனது சீடர்கள் 12 பேருடைய பாதங்களைக் கழுவி முத்தமிடும் நிகழ்வை நினைவு கூறும் வகையில், ஆலயங்களில் உள்ள 12 நபர்கள் தேர்வு செய்யப்பட்டு அவருடைய பாதங்களை பாதிரியார்கள் கழுவி முத்தமிடும் நிகழ்வு எல்லா ஆலயங்களிலும் நடைபெறுகிறது. தொடர்ந்து மறுநாள் 7-ந்தேதி (வெள்ளிக்கிழமை) இயேசுநாதர் சிலுவையில் அறையப்பட்ட நாள், புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது. அதன்பின்னர், சனிக்கிழமை நள்ளிரவு ஈஸ்டர் திருவிழா கொண்டாட்டங்கள் நடைபெறுகிறது. இவ்வாறு சாம்பல் புதன் முதல் தவக்காலத்தை தொடங்கிய கிறிஸ்தவர்கள், கிறிஸ்து உயிர்ப்பு திருவிழாவான ஈஸ்டர் பண்டிகையோடு தவக்காலத்தை நிறைவு செய்கிறார்கள்'' என்றனர்.