மணிப்பூர் கலவரத்துக்கு கிறிஸ்தவ ஐக்கிய பேரவை கண்டனம் ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் பேட்டி

மணிப்பூர் கலவரத்துக்கு கிறிஸ்தவ ஐக்கிய பேரவை கண்டனம் தெரிவிப்பதாக ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் கூறினார்.

Update: 2023-06-17 19:15 GMT

நாகர்கோவில்:

மணிப்பூர் கலவரத்துக்கு கிறிஸ்தவ ஐக்கிய பேரவை கண்டனம் தெரிவிப்பதாக ஆயர் வின்சென்ட் மார் பவுலோஸ் கூறினார்.

மணிப்பூர் கலவரம்

குமரி மாவட்ட கிறிஸ்தவ ஐக்கிய பேரவை தலைவரும், மார்த்தாண்டம் மலங்கரை கத்தோலிக்க மறை மாவட்ட ஆயருமான வின்சென்ட் மார் பவுலோஸ் நேற்று நாகர்கோவிலில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

மணிப்பூர் கலவரம் பல்லாயிரக்கணக்கான பழங்குடி மக்களின் வாழ்வைத் தலைகீழாக புரட்டிப்போட்டதோடு, மதக்கலவரத்திற்கு காரணமாகவும் அமைந்துள்ளது என்பது வேதனையைக் கொடுக்கிறது. இதனால் மணிப்பூர் மக்களின் எதிர்காலம் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது.

தேவாலயங்கள் இடிப்பு

வசதி படைத்த நகர்ப்புற மெய்தி இன மக்களை பழங்குடியினர் பட்டியலில் இணைத்தால் தங்களுக்கான இடஒதுக்கீடு அவர்களால் பறிக்கப்படும் என்பது குகி, நாகா இனத்தவர்களின் நியாயமான அச்சமாக உள்ளது. மேலும் தாங்கள் வசிக்கும் மலைப்பகுதிகளில் நிலங்களைக் கையகப்படுத்தி தங்களை வெளியேற்ற மெய்தி இன மக்கள் முற்படுவார்கள் என்பதே ஆத்திரத்திற்கான முக்கிய காரணமாக அமைந்திருக்கிறது.

இதனால் மணிப்பூரில் நூற்றுக்கணக்கான தேவாலயங்கள் இடிக்கப்பட்டதோடு கிறிஸ்தவ மக்கள் வெளியேற்றப்பட்டு சொத்துகள், பொருட்கள் எல்லாம் தீக்கிரையாக்கப்பட்டுள்ளன.

மாறாத காயங்கள்

இந்தியா ஒரு ஜனநாயக, மதசார்பற்ற நாடு. ஆனால் தற்போது அதன் இறையாண்மைக்கு இழுக்கு ஏற்பட்டுள்ளது. அண்மை காலங்களில் சிறுபான்மையினர் என்பதற்காக கிறிஸ்தவர்கள் பல்வேறு விதங்களில் கொடுமைகளுக்கு ஆளாகி வருவது மாறாத காயங்களை உருவாக்கியிருக்கிறது.

மேலும் இப்படிப்பட்ட கலவரங்கள், வன்முறை நிகழ்வுகள் மதத்தின் பெயரால் நடைபெறாதபடி பார்த்துக் கொள்வது மத்திய-மாநில அரசுகளின் மிகப்பெரிய கடமை என்பதை உரக்கக் கூறுகிறோம். மணிப்பூரில் மனித மாண்புக்கும், இறையாண்மைக்கும் எதிராக நடைபெறும் மதவெறித் தாக்குதல்களை குமரி மாவட்ட கிறிஸ்தவ ஐக்கியப் பேரவை சார்பாக வன்மையாக கண்டிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

பேட்டியின்போது கிறிஸ்தவ ஐக்கிய பேரவை முன்னாள் தலைவரும், கோட்டார் மறைமாவட்ட ஆயருமான நசரேன் சூசை, குழித்துறை மறைமாவட்ட பிரதிநிதி யேசுரெத்தினம், தென்னிந்திய திருச்சபையைச் சேர்ந்த போதகர் கிறிஸ்டோபர் விஜயன், இரட்சனிய சேனை மேஜர் செல்வம், எல்.எம்.எஸ். சபை பிரதிநிதி ஆயர் வில்சன், செயலாளர் கிங்ஸ்டன், பொருளாளர் வின்சென்ட் ராபர்ட், பேரவை துணைத்தலைவர் ஒய்சிலின் சேவியர், செயலாளர் பிரபின் செல்வமணி, செய்தி தொடர்பாளர் ராஜ், லுத்தரன் திருச்சபை டேவிட்சன், மெசியா மிஷன் சபையைச் சேர்ந்த ஆயர் மரிய ராஜ், பெந்தேகோஸ்த் பெடரேஷன் பென்சிகர், தக்கலை மறைமாவட்டம் சார்பில் தாமஸ் பவ்வத்து பறம்பில், அருட்சகோதரி பியத்தா, ரெஜினி விஜிலா பாய் ஆகியோர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்