விநாயகர் சிலைகளை கரைக்க 4 இடங்கள் தேர்வு

விநாயகர் சிலைகளை கரைக்க 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளன.

Update: 2022-09-01 18:44 GMT

அரியலூர் மாவட்டத்தில் 300-க்கும் மேற்பட்ட இடங்களில் விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது. இந்தநிலையில் இன்று (வெள்ளிக்கிழமை) விநாயகர் சிலைகளை கரைப்பதற்காக மாவட்ட முழுவதும் 4 இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. அதன்படி அரியலூர் உட்கோட்ட போலீஸ் சரகத்தில் திருமானூர், திருமழப்பாடி கொள்ளிடக்கரை பகுதியிலும், ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் சரகத்தில் வடவார்தலைப்பு, மதனத்தூர் ஆகிய கொள்ளிட ஆற்று நீர்நிலைகளிலும் விநாயகர் சிலைகள் கரைக்கப்படுகிறது. இதையடுத்து, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பெரோஸ்கான் அப்துல்லா ஜெயங்கொண்டம் உட்கோட்ட காவல் சரகத்தில் விநாயகர் சிலை கரைக்கும் இடமான மதனத்தூர் மற்றும் வடவார்தலைப்பு ஆகிய கொள்ளிட ஆற்று பாலத்தில் நேற்று திடீரென நேரில் சென்று ஆய்வு செய்தார். அப்போது கொள்ளிடம் ஆற்றில் தற்போது நீர்வரத்து அதிகரித்து உள்ளதால் ஆற்றில் இறங்கி விநாயகர் சிலைகளை கரைக்க அனுமதிக்க கூடாது. பொதுமக்களின் பாதுகாப்பு கருதி பாலத்தில் இருந்து கிரேன் மூலம் ஆற்றில் சிலைகளை கரைப்பதற்கு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். எந்த நேரமும் கண்காணிப்பில் இருந்து அசம்பாவிதம் ஏதும் நடைபெறாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் என போலீசாருக்கு அவர் உத்தரவிட்டார். இந்த ஆய்வில் மாவட்ட உதவி சூப்பிரண்டு ரவிசேகரன், ஜெயங்கொண்டம் துணை சூப்பிரண்டு கலைகதிரவன், தா.பழூர் இன்ஸ்பெக்டர் கதிரவன் உள்ளிட்ட அதிகாரிகள் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்