சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டியது

வால்பாறையில் கனமழை பெய்தது. தொடர் மழை காரணமாக சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதனால். ஆற்றோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

Update: 2022-07-10 16:42 GMT

வால்பாறை, 

வால்பாறையில் கனமழை பெய்தது. தொடர் மழை காரணமாக சோலையாறு அணை முழு கொள்ளளவை எட்டி நிரம்பியது. இதனால். ஆற்றோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடப்பட்டது.

தொடர் மழை

வால்பாறை பகுதியில் தென்மேற்கு பருவமழை தீவிரமடைந்து உள்ளது. இந்தநிலையில் நேற்ற வால்பாறை மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் கனமழை பெய்தது. இதனால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. மார்க்கெட்டுக்கு அத்தியாவசிய பொருட்கள் வாங்க வந்தவர்கள் மழையில் நனையாமல் இருக்க குடைகளை பிடித்தபடி நடந்து சென்றனர். தொடர் மழையால் வனப்பகுதிகள் மற்றும் சாலையோரங்களில் புதிதாக நீர்வீழ்ச்சிகள் உருவாகி உள்ளன.

இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர். கனமழை காரணமாக வெள்ள பாதிப்பு ஏற்படும் அபாயம் உள்ளது. இதனால் வருவாய்த்துறை, நகராட்சி நிர்வாகம் சார்பில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. வால்பாறை அரசு கலை, அறிவியல் கல்லூரி, நகராட்சி சமுதாயக்கூடம் உள்ளிட்ட இடங்களில் நிவாரண முகாம்கள் தயார் நிலையில் வைக்கப்பட்டு உள்ளது.

வெள்ள அபாய எச்சரிக்கை

வெள்ளிமலை டனல் ஆறு, நடுமலை ஆறு, கூழாங்கல் ஆறு உள்ளிட்ட நீர்நிலைகளில் வெள்ளம் கரை புரண்டு ஓடுகிறது. இதனால் ஆற்றோர பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை ஒலிபெருக்கி மூலம் விடுக்கப்பட்டு வருகிறது. மேலும் அங்கு சுற்றுலா பயணிகள் இறங்கி குளிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது. இருப்பினும், வெள்ளமலை டனல் பகுதியில் ஆபத்தை உணராமல் சுற்றுலா பயணிகள் தடுப்புகளை தாண்டி சென்று புகைப்படம் எடுக்கின்றனர்.

வால்பாறை-பொள்ளாச்சி மலைப்பாதையில் மண்சரிவு மற்றும் மரங்கள் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்படாமல் இருக்க பொக்லைன் எந்திரத்துடன் நெடுஞ்சாலைத்துறையினர் ரோந்து சென்று வருகின்றனர். தொடர் மழையால் மின்நிலையங்கள் இயக்கப்பட்டு வருகிறது. சோலையாறு மின் நிலையம்-1 இயக்கப்பட்டு, மின் உற்பத்திக்கு பின் 783 கனஅடி தண்ணீர் பரம்பிக்குளம் அணைக்கும், சோலையாறு மின் நிலையம்-2-ல் மின் உற்பத்திக்கு பின்னர் 630 கனஅடி தண்ணீர் கேரளாவிற்கும் திறந்து விடப்படுகிறது.

முழு கொள்ளளவு

அணையில் இருந்து 1,413 கனஅடி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. தற்போது கனமழை காரணமாக சோலையாறு அணைக்கு வினாடிக்கு 4,377 கனஅடி தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது. இதனால் சோலையாறு அணையின் நீர்மட்டம் கிடுகிடுவென உயர்ந்து 160 அடியை எட்டி உள்ளது. அணையின் முழு கொள்ளளவான 160 அடி நிரம்பி, மதகுகள் வழியாக தண்ணீல் வழிந்தோடுகிறது. கடந்த ஆண்டை ஒப்பிடும் போது தற்போது 13 நாட்களுக்கு முன்பு நிரம்பியது குறிப்பிடத்தக்கது.

நேற்று காலை 6 மணியுடன் 24 மணி நேரத்தில் முடிவடைந்த மழையளவு விவரம் (மில்லி மீட்டரில்) வருமாறு:- மேல்நீரார்-87, கீழ்நீரார்-56, சோலையாறு அணை-48, வால்பாறை-46 பெய்து உள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்