சித்திரை திருவிழா கோலாகலம்: 108 நாதஸ்வர, தவில் வாத்தியங்களுடன் அழகுமுத்து அய்யனாருக்கு திருக்கல்யாணம்

கடலூர் அருகே தென்னம்பாக்கம் அழகுமுத்து அய்யனார் கோவில் சித்திரை திருவிழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் 108 நாதஸ்வர, தவில் வாத்தியங்களுடன் அழகுமுத்து அய்யனாருக்கு திருக்கல்யாணம் நடைபெற்றது.

Update: 2023-04-17 20:57 GMT

கடலூர்,

கடலூர் அருகே தென்னம்பாக்கம் கிராமத்தில் பிரசித்தி பெற்ற அழகு முத்து அய்யனார் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும் சித்திரை மாதம் முதல் திங்கட்கிழமை அன்று சித்திரை திருவிழா மற்றும் திருக்கல்யாண உற்சவம் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான விழா நேற்று நடைபெற்றது.

விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று காலை மலட்டாற்றில் இருந்து காவடியும், பொன்னி அம்மன் கோவிலில் இருந்து கரகமும் மேள, தாளம் முழங்க ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. பின்னர் அழகர் சித்தர் பீடத்தில் சிறப்பு பூஜை செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பிக்கப்பட்டது.

திருக்கல்யாண உற்சவம்

இதனை தொடர்ந்து தென்னம்பாக்கம் ஆற்றில் அழகர் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதையடுத்து மாலையில் வேட சாத்தான் கோவிலில் இருந்து கரகம் ஊர்வலமாக புறப்பட்டு கோவிலை வந்தடைந்தது. அதன் பின்னர் கோவிலில் திருக்கல்யாண உற்சவம் வெகு விமரிசையாக நடந்தது.

இதில் ஒரே நேரத்தில் 108 நாதஸ்வர, தவில் இசைக்கலைஞர்கள் வாத்தியங்களை இசைக்க உற்சவர் பூரணி பொற்கலை அம்மன் சமேத அழகருக்கு திருக்கல்யாணம் கோலாகலமாக நடைபெற்றது.

இதனை பக்தர்கள் பரவசத்துடன் பார்த்து சாமி தரிசனம் செய்தனர்.

நேர்த்திக்கடன்

மேலும் வேண்டுதல் நிறைவேறிய பக்தர்கள் பலர் தங்களது நேர்த்திக்கடனை செலுத்தும் வகையில் கோவிலில் பொம்மைகள் வைத்து சிறப்பு வழிபாடு நடத்தினர்.

Tags:    

மேலும் செய்திகள்