சிராவயல் மஞ்சுவிரட்டு முன்னேற்பாடு பணிகள் தீவிரம்-அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், கலெக்டர் நேரில் ஆய்வு

சிராவயல் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நாளை மறுநாள்(17-ந்தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு நடைபெறும் முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

Update: 2023-01-14 18:45 GMT

திருப்பத்தூர்

சிராவயல் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நாளை மறுநாள்(17-ந்தேதி) நடைபெறுகிறது. இதையொட்டி அங்கு நடைபெறும் முன்னேற்பாடு பணிகளை அமைச்சர் கே.ஆர். பெரியகருப்பன், கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர்.

மஞ்சுவிரட்டு

தை மாதம் பிறந்தாலே தென்மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு மற்றும் மஞ்சுவிரட்டு போட்டிகள் நடப்பது வழக்கம். அதிலும் குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெறும்.ஆண்டுதோறும் மாட்டு பொங்கல் தினத்திற்கு மறுநாள் திருப்பத்தூர் அருகே புகழ்பெற்ற சிராவயலில் மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி ஆங்கிலேயர்கள் ஆட்சிகாலம் முதல் நடைபெற்று வருகிறது. இந்த மஞ்சுவிரட்டானது மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு நிகழ்ச்சிக்கு அடுத்தப்படியாக சிறப்பு வாய்ந்ததாகும். இந்த ஆண்டு பொங்கல் திருநாளை முன்னிட்டு நாளை மறுநாள்(17-ந் தேதி) மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடக்கிறது.

அமைச்சர் ஆய்வு

இதையொட்டி சிராவயல் மஞ்சுவிரட்டு பொட்டலில் உள்ள வாடிவாசல் பகுதியில் முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. முன்னதாக மஞ்சுவிரட்டு திடலை சுற்றி தடுப்பு வேலிகள் அமைக்கப்பட்டு அங்கு முக்கிய பிரமுகர்கள் அமரும் இடம், பார்வையாளர்கள் அமரும் இடம், மருத்துவ வசதி மேற்கொள்ளும் இடம், காளைகள் பரிசோதனை செய்யும் இடம் உள்ளிட்ட இடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

மேலும் காளைகள் சீறிபாயும் இடத்தில் தென்னை நார் கழிவுகள் கொட்டப்பட்டு காளைகளுக்கும், வீரர்களுக்கும் எவ்வித காயமும் ஏற்படாமல் இருக்கும் வகையில் தயார் செய்யப்பட்டுள்ளது. இதையொட்டி நேற்று இந்த பாதுகாப்பு ஏற்பாடுகளை தமிழக கூட்டுறவுத்துறை அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன், மாவட்ட கலெக்டர் மதுசூதன்ரெட்டி ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

மேலும் அங்கு ஜல்லிக்கட்டு காளைகள், வீரர்கள் வந்து செல்லும் இடம், ஆம்புலன்ஸ் வாகனம் செல்லும் இடம் உள்ளிட்டவைகள் குறித்து அதிகாரிகளிடம் கேட்டறிந்தனர். இந்த ஆய்வின் போது மஞ்சுவிரட்டு ஒருங்கிணைப்பு தலைவரும், ஊர் அம்பலக்காரர் வேலுச்சாமி அம்பலம், திருப்பத்தூர் தாசில்தார் வெங்கடேசன், தேவகோட்டை கோட்டாட்சியர் பால்துரை, திருப்பத்தூர் துணை சூப்பிரண்டு ஆத்மநாபன் உள்பட பலர் உடனிருந்தனர்.

கண்டுப்பட்டி

இதேபோல் சிவகங்கை அருகே கண்டுப்பட்டி கிராமத்தில் உள்ள பழைய அந்தோணியார் ஆலய திருவிழாவையொட்டி வருகிற 19-ந்தேதி மஞ்சுவிரட்டு நிகழ்ச்சி நடைபெற உள்ளது. பல ஆண்டுகளாக நடைபெற்று வரும் இந்த ஆலய திருவிழாவானது மத நல்லிணக்கத்தை வலியுறுத்தி சகோதரத்துவத்தை வலியுறுத்தும் விழாவாக கொண்டாடப்பட்டது. மஞ்சுவிரட்டு நிகழ்ச்சிக்காக அங்குள்ள மஞ்சுவிரட்டு திடலில் முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகிறது. மேலும் மஞ்சுவிரட்டு தினத்தையொட்டி அன்று கண்டுப்பட்டி கிராமத்தில் உள்ள அனைத்து வீடுகளிலும் விருந்து உபசாரம் நிகழ்ச்சியும் நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

மேலும் செய்திகள்