சின்னசேலம் ரெயில் நிலையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகை

சின்னசேலம்-கள்ளக்குறிச்சி ரெயில்பாதை பணிகளை விரைந்து முடிக்கக்கோரி சின்னசேலம் ரெயில் நிலையத்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் முற்றுகையிட்டனர்

Update: 2022-12-02 18:45 GMT

சின்னசேலம்

முற்றுகை

சின்னசேலத்திலிருந்து கள்ளக்குறிச்சி வரை புதிய ரெயில்பாதை மற்றும் ரெயில் நிலையம் அமைப்பதற்கு கடந்த 2006-ம் ஆண்டு ரூ.116 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு பல ஆண்டு்கள் கழித்து பணிகள் தொடங்கியது. ஆனால் கட்டுமான பொருட்களின் விலை உயர்வு போன்ற பல்வேறு காரணங்களால் இந்த திட்டம் மிகவும் மந்தமாக நடைபெற்று வருகிறது.

இந்த நிலையில் சின்னசேலம் வட்ட செயலாளர் மாரிமுத்து தலைமையில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் நேற்று சின்னசேலம் ரெயில் நிலையத்தை திடீரென முற்றுகையிட்டனர். கமிட்டி செயலாளர்கள் பழனி, அருள்தாஸ், சிவாஜி ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினரும், முன்னாள் எம்.எல்.ஏ.வுமான பாலபாரதி, மாவட்ட செயலாளர் டி.எம்.ஜெய்சங்கர் ஆகியோர் கோரிக்கையை விளக்கி பேசினர். இதில் மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் ஏழுமலை, பூவராகன், மாவட்ட குழு உறுப்பினர்கள் ஏ.வி.ஸ்டாலின்மணி, அ.பா.பெரியசாமி, வட்டக்குழு உறுப்பினர் பழனி, ராமசாமி உள்ளிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் கலந்து கொண்டனர்.

பேச்சுவார்த்தை

முன்னதாக சின்னசேலம் பஸ் நிலையத்தில் இருந்து ஊர்வலமாக ரெயில் நிலையத்துக்கு வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினரை போலீசார் தடுத்து நிறுத்தினர். அவர்களிடம் சேலம் ரெயில்வே உதவி கோட்ட பொறியாளர் வின்சன்ட், சின்னசேலம் தாசில்தார் இந்திரா, கள்ளக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு ரமேஷ் ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது தற்போது நில மதிப்பீட்டு தொகை, கட்டுமான பொருட்கள் ஆகியவற்றின் விலை உயர்வு காரணமாக ரெயில்பாதை திட்டத்துக்கு ரூ.356 கோடி கூடுதல் நிதி தேவைப்படுகிறது. மேலும் நில உரிமையாளர்கள் சிலர் கூடுதல் இழப்பீட்டுதொகை கேட்டு கோர்ட்டுக்கு சென்றதாலும் இந்த திட்டம் தாமதம் ஆகி உள்ளது. திட்டத்துக்கு தேவையான கூடுதல் நிதியை மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். அரசு நிதியை வழங்கியதும் வருகிற 2024-ம் ஆண்டுக்குள் சின்னசேலம்-கள்ளக்குறிச்சி ரெயில் பாதை பணிகள் முற்றிலும் முடிக்கப்படும் என அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதையடுத்து அவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

மேலும் செய்திகள்