சின்னப்புலியூர்கோட்டை மாரியம்மன் கோவிலுக்கு பக்தர்கள் தீர்த்தக்குட ஊர்வலம்
தீர்த்தக்குட ஊர்வலம்
பவானி அருகே சின்னப்புலியூரில் உள்ள கோட்டை மாரியம்மன் கோவில் மகா கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு கடந்த 4-ந்தேதி யாக சாலை கால்கோள் விழாவும், பெண்கள் முளைப்பாரி இடுதல் நிகழ்ச்சியும் நடைபெற்றது. நேற்று முன்தினம் காலை 9 மணிக்கு சின்னப்புலியூர் ஊராட்சி மன்ற தலைவர் எஸ்.என்.வெங்கடேசன் தலைமையில் பவானி கூடுதுறையில் இருந்து புனித தீர்த்தம் எடுத்து கோவிலுக்கு வருதல் நிகழ்ச்சியும், மாலை 4 மணிக்கு முளைப்பாரி எடுத்துக்கொண்டு அம்மன் அழைப்பு நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று காலை விநாயகர் வழிபாடு நடந்தது. பின்னர் வாஸ்து சாந்தியுடன் ஹோம குண்டத்திற்கு தீபாராதனை காட்டப்பட்டது. காலை 9 மணிக்கு மேல் ஆலய விமான கோபுர கலசங்களுக்கு அபிஷேக ஆராதனையும், சிலை மூர்த்திகளுக்கு கண் திறப்பும் நடந்தது.
இன்று (புதன்கிழமை) முதல் கால யாக பூஜையும், நாளை (வியாழக்கிழமை) 2-ம் கால யாக பூஜையும் நடக்கிறது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) 108 மூலிகை திரவியங்களுடன் மூல மந்திரங்கள் முழங்க காயத்ரி மந்திரத்துடன் கோட்டை மாரியம்மன், செல்லியாண்டி அம்மன், ஓங்காளியம்மனுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.