சின்னாளப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை

மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து சின்னாளப்பட்டி பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர்.

Update: 2022-07-11 14:09 GMT

சின்னாளப்பட்டியில் இருந்து செம்பட்டி செல்லும் சாலையில், சின்னாளப்பட்டி பேரூராட்சிக்கு சொந்தமான குப்பைக்கிடங்கு உள்ளது. இங்கு மின் மயானம் அமைக்க பேரூராட்சி நிர்வாகம் சார்பில் முடிவு செய்யப்பட்டது. இதற்கிடையே குப்பை கிடங்கு அருகே உள்ள அஞ்சுகம் காலனி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் வசிக்கும் பொதுமக்கள் மின் மயானம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் அப்பகுதி பொதுமக்கள் 200-க்கும் மேற்பட்டோர்  சின்னாளப்பட்டி பேரூராட்சி அலுவலகத்துக்கு திரண்டு வந்தனர். அப்போது அவர்கள் பேரூராட்சி அதிகாரிகளிடம் புகார் மனு கொடுக்க வேண்டும் என கேட்டனர். ஆனால் அங்கிருந்த பணியாளர்கள் செயல் அலுவலர், பேரூராட்சி தலைவர் மற்றும் அலுவலர்கள் இன்னும் அலுவலகம் வரவில்லை என கூறினர். இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் பேரூராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

இதுகுறித்து தகவல் அறிந்த பேரூராட்சி சுகாதார ஆய்வாளர் கணேசன், முற்றுகை போராட்டம் நடத்திய பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதுடன், அவர்களிடம் இருந்து மனுவை பெற்றுக்கொண்டார். மேலும் இதுதொடர்பாக அதிகாரிகளிடம் தெரிவித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தார். இதையடுத்து பொதுமக்கள் முற்றுகை போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில், எங்கள் பகுதியில் உள்ள குப்பை கிடங்கில் குப்பைகளை எரிப்பதால் புகைமூட்டம் ஏற்பட்டு துர்நாற்றம் வீசுகிறது. இதனால் குப்பை கிடங்கை அகற்ற வேண்டும் என்று 10 ஆண்டுகளாக கோரிக்கை விடுத்து வருகிறோம். அதற்கு இதுவரை தீர்வு காணவில்லை. ஆனால் தற்போது மின் மயானம் கொண்டு வருவதாக கூறுகின்றனர். இங்கு மின் மயானம் அமைக்க அனுமதிக்க மாட்டோம். மக்களுக்கு பாதிப்பு இல்லாத பகுதியில் குப்பைக்கிடங்கையும், மின் மயானத்தையும் அமைக்க வேண்டும். மேலும் இப்பகுதியில் டாஸ்மாக் கடை ஒன்றும் வர உள்ளதாக கூறப்படுகிறது. அதனையும் எங்கள் பகுதியில் அனுமதிக்க மாட்டோம் என்றனர்.

Tags:    

மேலும் செய்திகள்