ஓடும் பஸ்சில் மாணவிகளிடம் சில்மிஷம் அரசு பஸ் கண்டக்டர் போக்சோவில் கைது; நம்பியூர் அருகே பரபரப்பு

நம்பியூர் அருகே ஓடும் பஸ்சில் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக அரசு பஸ் கண்டக்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

Update: 2022-08-27 21:15 GMT

நம்பியூர்

நம்பியூர் அருகே ஓடும் பஸ்சில் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக அரசு பஸ் கண்டக்டர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.

மாணவிகளிடம் சில்மிஷம்

கோபி அருகே உள்ள புதுக்காடு பகுதியை சேர்ந்தவர் சரவணன் (வயது 48). இவர் கோபியில் இருந்து நம்பியூர் செல்லும் 2-ம் எண் அரசு பஸ்சில் கண்டக்டராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த பஸ்சில் நாள்தோறும் குருமந்தூர் அரசு மேல்நிலை பள்ளிக்கு ஏராளமான மாணவ- மாணவிகள் சென்று வருகிறார்கள். அவ்வாறு பயணம் செய்யும் மாணவிகளிடம் கண்டக்டர் சரவணன் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக ஏற்கனவே மாணவிகள் தங்கள் பெற்றோர்களிடம் கூறிவந்தார்கள். இதையடுத்து பெற்றோர்கள் பள்ளியின் தலைமை ஆசிரியரிடம் இதுபற்றி தெரிவித்தார்கள். தலைமை ஆசிரியரும் கண்டக்டர் சரவணனை கண்டித்ததாக தெரிகிறது.

பஸ்சை சிறைபிடிப்பு

ஆனாலும் கண்டக்டர் சரவணன் தொடர்ந்து மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. ஒரு கட்டத்தில் மாணவிகளின் பெற்றோரும் கண்டக்டர் சரவணனை எச்சரித்துள்ளனர். இந்தநிலையில் நேற்று முன்தினம் மாலை கோபியில் இருந்து நம்பியூரை நோக்கி 2-ம் எண் அரசு டவுன் பஸ் புறப்பட்டது. வழக்கம்போல் குருமந்தூர் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவ-மாணவிகள் அந்த பஸ்சில் ஏறி பயணம் செய்தார்கள். அப்போதும் பணியில் இருந்த கண்டக்டர் சரவணன் மாணவிகளிடம் சில்மிஷத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. இதுகுறித்து மாணவிகள் தங்களது பெற்றோர்களுக்கு தகவல் கொடுத்தனர். இதைத்தொடர்ந்து புதுசூரிபாளையம் என்ற இடத்தில் 50-க்கும் மேற்பட்ட பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் பஸ்சை சிறைபிடித்தார்கள். சரவணனை சுற்றி வளைத்தார்கள்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் நம்பியூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் நிர்மலா போலீசாருடன் சம்பவ இடத்துக்கு சென்று கண்டக்டர் சரவணனை போலீஸ் நிலையத்துக்கு அழைத்து வந்தார்.

போக்சோவில் கைது

இதையடுத்து மாணவிகளின் பெற்றோர்கள் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி கண்டக்டர் சரவணனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தார்கள். பின்னர் கோபி 2-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் ஆஜர்படுத்தி நீதிமன்ற காவலில் வைக்கப்பட்டார்.

அரசு பஸ் கண்டக்டர் சரவணன் போக்சோ சட்டத்தில் கைது செய்யப்பட்ட தகவல் அரசு போக்குவரத்து கழக அதிகாரிகளுக்கும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனால் அவர் மீது துறை ரீதியான நடவடிக்கை பாயும் என்று கூறப்படுகிறது. 

Tags:    

மேலும் செய்திகள்