விண்ணை தொட்ட வரமிளகாய் விலை
வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதியில் பச்சை மிளகாய் விலை வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் வரமிளகாய் கிலோ ரூ.320 வரை விற்பதால் விவசாயிகள், இல்லத்தரசிகள் கவலை அடைந்துள்ளனர்.
பச்சை மிளகாய்
வடகாடு மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நெல், வாழை, கரும்பு, சோளம், கத்தரி, மிளகாய், வெண்டை, பாகை, புடலை என பல்வகை விவசாய விளை பொருட்கள் அதிக அளவில் இப்பகுதியில் உற்பத்தி நடைபெற்று வருகின்றன. அந்த வகையில் பச்சை மிளகாய் சாகுபடி பணிகளில் தற்போது விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். இதற்காக மிளகாய் விதைகளை வாங்கி வந்து பதியமிட்டும், நர்சரி கார்டன்களில் விற்பனை ஆகும். மிளகாய் கன்றுகளையும் வாங்கி வந்து நடவு செய்தும் வருகின்றனர்.
விவசாயிகள் வேதனை
ஒரு சில இடங்களில் மிளகாய் கன்றுகள் நடவு பணிகள் நடந்தாலும், சில இடங்களில் ஏற்கனவே சாகுபடி செய்துள்ள பச்சை மிளகாய் செடிகளில் இருந்து, பச்சை மிளகாய்களை கூலி தொழிலாளர்கள் மூலமாக பறித்து கடைகளில் விற்பனை செய்து வருகின்றனர். தற்சமயம் ஒரு கிலோ பச்சைமிளகாய் ரூ.25 முதல் ரூ.30 வரை விற்பனை ஆகி வருவதாகவும், இந்த விலை தங்களுக்கு கட்டுபடி ஆகவில்லை எனவும், தற்போது விவசாய இடுபொருட்களின் விலை உயர்வு காரணமாக, ஏற்கனவே விவசாயிகள் கவலைப்பட்டு வரும் நிலையில், தாங்கள் பாடுபட்டு விளைவித்த விவசாய விளை பொருட்கள் தாங்கள் எதிர்பார்த்த அளவிற்கு விலை இல்லாததால் விவசாயிகள் வேதனைப்பட்டு வருகின்றனர்.
வரமிளகாய்
ஆனால் இதே பச்சை மிளகாயை பழமாகும் பொழுது காரத்தன்மை கொண்ட வரமிளகாய் கிடைக்கும். ஆனால் அதன் விலையோ விண்ணை முட்டும் அளவுக்கு உயர்வு பெற்று கிலோ ரூ.300 முதல் ரூ.320 வரை விற்பனை ஆகி வருகிறது. இதனால் இல்லத்தரசிகள் கவலைப்பட்டு வருகின்றனர். இப்பகுதிகளில் விளையும் பச்சை மிளகாயை காயாக இருக்கும் போதே அறுவடை செய்து விற்பனை செய்து வருவதாகவும், பழத்திற்கு என்று மிளகாயை விட்டு விட்டால் மிளகாய் செடிகள் மரத்து போய் பின்னர் காய்ப்பு தன்மையை இழந்து விடுவதும் உண்டு என்று விவசாயிகள் கூறுகின்றனர். இதனால் பழத்திற்கு என மிளகாய் செடிகளை வளர்க்காமல் பச்சை மிளகாய் ஆகவே பறித்து விற்பனை செய்து வருவதாகவும் தெரிவித்தனர்.
இதுகுறித்து இப்பகுதி விவசாயிகள் கூறியதாவது:-
நலத்திட்டங்கள் செயல்படுத்த வில்லை
வடகாடு பகுதியை சேர்ந்த கோபால்:- விவசாயிகள் உற்பத்தி செய்து விற்பனைக்கு வரும் சமயத்தில் அனைத்து வகையான விளை பொருட்களுக்கும் உரிய விலை கிடைப்பது இல்லை. இப்பகுதிகளில் விவசாயிகளது முன்னேற்றத்திற்காக எந்தவொரு நலத்திட்டங்களும் செயல்படுத்த படவில்லை. விவசாயிகளது எத்தனையோ கோரிக்கைகள் இருந்தும் இதுவரை யாரும் அவைகளை ஏறெடுத்தும் பார்க்கவில்லை. வரமிளகாய் கிலோ ரூ.320 வரைக்கும் விற்பது கவலை அளிக்கிறது.
இல்லத்தரசிகள் கவலை
ஆறுமுகம்:- விவசாயிகள் உற்பத்தி பொருட்கள் அனைத்தும் விவசாயிகளுக்கு கட்டுபடி ஆகாத நிலையில், அவர்கள் விலை கொடுத்து வாங்கும் அத்தியாவசிய பொருட்கள் அனைத்தும் விலை உயர்வு பெற்று அனைவரையும் பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கி வருகிறது. வர மிளகாய் கடந்த சில ஆண்டுகளாகவே படிப்படியாக உயர்வு பெற்று தற்போது, கிலோ ரூ.300 முதல் ரூ.320 வரை உயர்ந்து, இல்லத்தரசிகளை பெரும் சிரமத்திற்கு உள்ளாக்கி உள்ளது. இதற்கு காரணம் இவற்றை இருப்பு வைத்து விற்பனை செய்வதும் தான். இவ்வாறு இருப்பு வைப்பதை தடுத்தாலே வரமிளகாய், மல்லி உள்ளிட்ட விலை ஏறாது.
இவ்வாறு அவர்கள் கூறினர்.