குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரம்: உயர் சிகிச்சை அளிப்பதுடன், நிவாரண உதவிகள் அளிக்க வேண்டும் - டிடிவி தினகரன்

குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது விசாரணை மேற்கொண்டு, தவறு ஏற்பட்டிருந்தால் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிடிவி தினகரன் கூறியுள்ளார்.

Update: 2023-07-03 14:42 GMT

சென்னை,

ஒன்றரை வயது குழந்தையின் கை அகற்றப்பட்ட விவகாரத்தில் சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, தவறு ஏற்பட்டிருந்தால் உடனடியாக அவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியுள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:-

சென்னை ராஜிவ் காந்தி அரசு பொதுமருத்துவமனையில் தவறான சிகிச்சை அளிக்கப்பட்டதால் ராமநாதபுரம் மாவட்டத்தை சேர்ந்த தஸ்தகீர் என்பவரது ஒன்றரை வயது குழந்தையின் வலது கை அகற்றப்பட்டதாக வரும் செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன.

Hydrocephalus என்ற பாதிப்பின் காரணமாக தலையில் இருந்து நீர் வடிந்ததால் அந்த குழந்தைக்கு ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனை மருத்துவர்கள் அறுவை சிகிச்சை செய்த நிலையில், தவறான சிகிச்சையால் வலது கை பாதிக்கப்பட்டு, கை அகற்றப்பட்டதாக பெற்றோர் குற்றம் சாட்டுகின்றனர்.

ஆகவே, சிகிச்சை அளித்த மருத்துவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொண்டு, தவறு ஏற்பட்டிருந்தால் உடனடியாக அவர்கள் மீது பாரபட்சமின்றி கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். கடந்த சில நாட்களாக அரசு மருத்துவமனைகளில் இது போன்ற தவறான சிகிச்சைகள் நடந்துவருவதாக செய்திகள் வந்தவண்ணம் உள்ளன.

ஆகவே, மக்கள் உயிர் சார்ந்த இந்த பிரச்னையில் அலட்சியம் காட்டாமல் இந்த தவறுகள் நடப்பதற்கான காரணம் என்ன என்பதை தமிழ்நாடு அரசு அறிய வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைக்கு உயர் சிகிச்சை அளிப்பதுடன், அரசின் சார்பில் நிவாரண உதவிகள் அளிக்க முதலமைச்சரை வலியுறுத்துகின்றேன்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார்.


Tags:    

மேலும் செய்திகள்