குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும்
நீலகிரியில் உள்ள குழந்தை இல்லங்களில், குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தினார்.;
ஊட்டி,
நீலகிரியில் உள்ள குழந்தை இல்லங்களில், குழந்தைகளுக்கு தரமான உணவு வழங்க வேண்டும் என கலெக்டர் அம்ரித் அறிவுறுத்தினார்.
குழந்தைகள் பாதுகாப்பு
நீலகிரி மாவட்ட கலெக்டர் அலுவலக கூடுதல் வளாக அரங்கில் குழந்தைகள் பாதுகாப்பு அலகின் சார்பில், துறை அலுவலர்களுடனான மாவட்ட அளவிலான குழந்தைகள் பாதுகாப்பு குழுக் கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் அம்ரித் தலைமை தாங்கி பேசும்போது கூறியதாவது:-
இளைஞர் நீதி (சிறார்களின் பராமரிப்பு மற்றும் பாதுகாப்பு) சட்டத்தின் அடிப்படையில், நீலகிரி மாவட்டத்தில் குழந்தைகளின் பாதுகாப்பை உறுதி செய்ய மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு குழு அமைக்கப்பட்டு உள்ளது.
குழந்தைகள் பாதுகாப்பு குழுக்கூட்டங்களை கிராம, வட்டார, நகராட்சி அளவில் 3 மாதங்களுக்கு ஒரு முறை காலதாமதமின்றி கூடி குழந்தைகளின் பாதுகாப்பு தொடர்பாக விவாதிக்கவும், அனைத்து துறை அலுவலர்கள், தேர்தல் பிரதிநிதிகள் மற்றும் உள்ளாட்சி அமைப்புகள் கூட்டத்தில் பங்கேற்க செய்ய வேண்டும்.
வெந்நீர் சாதனம்
மேலும் குழந்தை இல்லத்தை நிர்வகிப்பவர்கள் இல்லம் தொடர்பான உரிய சான்றிதழ்கள் பெற்றிருக்க வேண்டும். இல்லத்தின் அனைத்து பணியாளர்களும் காவல்துறை சரிபார்ப்பு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும். நீலகிரி மாவட்டம் குளிர்பிரதேசமாக இருப்பதால், அனைத்து இல்லங்களிலும் குழந்தைகளுக்கு வெந்நீர் சாதனம் வைக்க வேண்டும். இல்லத்தில் உள்ள குழந்தைகளுக்கு வழங்கப்படும் உணவு தரமானதாக இருக்க வேண்டும். மேலும் தேர்வு செய்யப்பட்ட ஊராட்சிகளில் துறை வாரியாக செயல்படுத்தப்பட்ட திட்டங்கள் குறித்த ஆய்வு செய்யப்பட்டது.
நலத்திட்ட உதவிகள்
7 கிராம ஊராட்சிகளில் கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் தொடர்பாக சிறப்பு முகாம்களை நடத்தி பொதுமக்களிடம் இருந்து மனுக்களை பெற்றுக்கொண்டு சம்மந்தப்பட்ட துறை அலுவலர்கள் தகுதியான பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். கூட்டத்தில் ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குனர் ஜெயராமன், மகளிர் திட்ட இயக்குனர் பாலகணேஷ், தோட்டக்கலைத்துறை இணை இயக்குனர் ஷிபிலா மேரி, கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் பகவத்சிங், வட்டார வளர்ச்சி அலுவலர்கள நந்தகுமார் (ஊட்டி), ஸ்ரீதர் (கூடலூர்), மோகனகுமாரமங்கலம் (குன்னூர்), ஜெயபாலன் (கோத்தகிரி) மற்றும் அரசுத்துறை அலுவலர்கள் கலந்துகொண்டனர்.