குழந்தைகளுக்கு சளி, காய்ச்சல் இருந்தால் டாக்டரிடம் பரிசோதனை செய்துவிட்டு பள்ளிக்கு அனுப்பலாம்
குழந்தைகளுக்கு சளி, இருமல், காய்ச்சல் இருந்தால் டாக்டரிடம் பரிசோதனை செய்துவிட்டு பள்ளிக்கூடங்களுக்கு அனுப்பலாம் என்று பெற்றோர்களுக்கு அமைச்சர் மா.சுப்பிரமணியன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.;
சென்னை,
கொரோனா தொற்று பரவல் மீண்டும் அதிகரித்து வருகிறது. தொற்று பாதிப்பு உள்ள இடங்களில் தமிழக அரசின் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை சார்பில் தனி கவனம் செலுத்தப்பட்டுள்ளது. அந்தவகையில் கொரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ள சென்னை மாநகராட்சி அடையாறு மண்டலத்துக்குட்பட்ட கஸ்தூரிபாய் நகர் 3-வது பிரதான சாலையில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைகளை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று நேரில் ஆய்வு செய்தார்.
அப்போது அவர் நிருபர்களுக்கு பேட்டியில் கூறியதாவது:-
தமிழகத்தில் கொரோனா தொற்றின் பாதிப்பு நாள்தோறும் அதிகரித்து வருகிறது. முதல்-அமைச்சரின் அறிவுறுத்தலின்படி, இந்த தொற்று பரவுவதை தடுப்பதற்கான நடவடிக்கைகள் அனைத்து இடங்களிலும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. பெருநகர சென்னை மாநகராட்சி பொதுசுகாதாரத்துறையின் சார்பில் பாதுகாப்பு மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மிகச் சிறப்பாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
3,500 களப்பணியாளர்கள்
தமிழகத்தில் ஒட்டுமொத்தமாக 24 மணிநேரத்தில் ஏற்படுகிற தொற்றில் 50 சதவீத பாதிப்பு சென்னையில் மட்டும் ஏற்படுகிறது. இதன் காரணத்தினால் தொடர்ந்து சென்னையில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. சென்னையில் 112 தெருக்களில் 3 நபர்களுக்கு மேலும், 25 தெருக்களில் 5 நபர்களுக்கு மேற்பட்டவர்களுக்கும் தொற்று பாதிப்பு உள்ளது. மொத்தமாக சென்னையில் இன்று (நேற்று) 2 ஆயிரத்து 225 நபர்கள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் 92 சதவீதம் நபர்கள் வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்டு, அவர்களின் உடல்நிலை குறித்து கேட்டறிந்து தொடர்ந்து கண்காணித்தல், ஆக்சிஜன் அளவை சரிபார்த்தல் போன்ற பல்வேறு பணிகளை பெருநகர சென்னை மாநகராட்சி சிறப்பாக மேற்கொண்டு வருகிறது. இந்த பணிகளை மேற்கொள்ள 3 ஆயிரத்து 500 களப்பணியாளர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
பெற்றோர்களுக்கு வேண்டுகோள்
கொரோனா தொற்று பாதித்த 2 ஆயிரத்து 225 நபர்களுக்கும் எந்தவிதமான உயிர் பாதிப்பு இல்லை என்கின்ற நிலையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். கொரோனா தொற்று பாதித்த அனைவருக்கும் காய்ச்சல், சளி, இருமல், தொண்டைவலி மற்றும் தலைவலி போன்ற அறிகுறிகள் இருப்பதாக கண்டறியப்பட்டுள்ளது.
பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புவதற்கு முன்பு அவர்களுக்கு சளி, இருமல், காய்ச்சல் போன்ற சிறிய அளவிலான அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக சம்பந்தப்பட்ட மக்கள் நல்வாழ்வுத்துறை மற்றும் மாநகராட்சியின் ஆஸ்பத்திரிகளுக்கு சென்று டாக்டர்களின் ஆலோசனையை பெறுவது மிகவும் அவசியமானது. அவர்களை பரிசோதித்து விட்டு மீண்டும் பாதிப்பு இல்லை என்றால் பள்ளிக்கு அனுப்பலாம்.
ஒரு குழந்தைக்கு தொற்று பாதிப்பு இருந்தால் அது நூற்றுக்கணக்கான குழந்தைகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். சிறிய அளவில் சளி, இருமல் போன்ற பாதிப்பு என்று அலட்சியமாக இல்லாமல் பரிசோதனை மேற்கொண்டால் மற்ற குழந்தைகளுக்கு அந்த பாதிப்பு ஏற்படாமல் தடுக்க முடியும். எனவே, பெற்றோர்கள் இதனை கருத்தில் கொண்டு முழு ஒத்துழைப்பு தரவேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.
இந்த ஆய்வின் போது, மண்டலக்குழுத் தலைவர் ஆர்.துரைராஜ், தெற்கு வட்டார துணை ஆணையாளர் டி.சினேகா, பொதுசுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத்துறை இயக்குநர் டாக்டர் செல்வவிநாயகம், மாநகர நல அலுவலர் டாக்டர் எம்.ஜெகதீசன் மற்றும் அதிகாரிகள் உடனிருந்தனர்.