நேரு போல் உடை அணிந்து வந்த குழந்தைகள்
செங்கோட்டை பள்ளியில் நடந்த விழாவில் குழந்தைகள் நேரு போல் உடை அணிந்து வந்து கலந்து கொண்டனர்.
செங்கோட்டை விஸ்வநாதபுரம் டிரஷர் ஐலண்ட் இன்டர்நேஷனல் பள்ளியில் குழந்தைகள் தின விழா கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு கிண்டர் கார்டன் பிரிவில் மாறுவேட போட்டி நடைபெற்றது. 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவ-மாணவிகளுக்கு ஓவியப்போட்டி மற்றும் மாறுவேட போட்டியும், 6 முதல் 11-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு வினாடி-வினா மற்றும் கைவினை பொருட்கள் தயாரித்தல் போட்டிகளும் நடத்தப்பட்டன. போட்டிகளை பள்ளியின் தாளாளர் டாக்டர் ஷேக் செய்யது அலி, முதல்வர் சமீமா பர்வீன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். போட்டியில் மாணவர்கள் அனைவரும் ஜவஹர்லால் நேரு உடை அணிந்தும், மாணவிகள் அனைவரும் நேருக்கு மிகவும் பிடித்த சிவப்பு வண்ண ரோஜாப்பூ உடை அணிந்தும் கலந்து கொண்டனர். போட்டியின் நடுவர்களாக ஆசிரியர்கள் பங்கேற்று மாணவர்களின் ஆடை அணிகலன்கள் மற்றும் அவர்களின் பேசும் திறனை கருத்தில் கொண்டு மதிப்பெண்கள் வழங்கினர். போட்டியில் பங்கேற்ற அனைத்து மாணவ-மாணவிகளுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.