ஆவின் பால் பண்ணையில் சிறுவர்கள் பணியமர்த்தப்படவில்லை - அமைச்சர் மனோ தங்கராஜ் விளக்கம்
அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் சிறுவர்கள் பணியமர்த்தப்பட்டிருப்பதாக ஊடகத்தில் செய்தி வந்தது. அது முற்றிலும் உண்மைக்குப் புறம்பான ஒரு சித்தரிக்கப்பட்ட செய்தி என்று தமிழக பால்வளத் துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னையில் பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
அம்பத்தூர் ஆவின் பால் பண்ணையில் சிறுவர்கள் பணியமர்த்தப்படவில்லை, ஆவினில் உள்ள எந்தவொரு அலுவலகம், பண்ணைகளில் சிறுவர்கள் பணியில் அமர்த்தப்படவில்லை, சிறுவர்கள் தொடர்பான புகாரில் சம்பந்தப்பட்டவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும். ஆவின் நிறுவன வளர்ச்சியில் குந்தகம் விளைவிக்கும் விதமாக இவ்வாறு வதந்தி பரப்பி வருகிறார்கள். வேலூர் ஆவினில் ஒரே எண்ணில் 2 வண்டிகள் இயங்கியதை கண்டுபிடித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம். எந்த தவறுகளையும் செய்வதற்கு ஆவின் நிர்வாகம் ஒருபோதும் அனுமதிக்காது.
ஒரு தனிநபர் தன்னுடைய போராட்டத்தை முன்னெடுக்க ஒரு சில நபர்களை அழைத்து வந்துள்ளார். அந்த நபருக்கும் அவரை பணியமர்த்திய நிறுவனத்துக்கும் சம்பளம் கொடுக்கல், வாங்கலில் பிரச்சினை இருப்பது தெரியவந்திருக்கிறது. ஆனால், சிறுவர்கள் பணியமர்த்தப்பட்டார்கள் என்பது தவறான செய்தி என்பதையும் காவல் துறை அதிகாரி தெரிவித்தார். இதையடுத்து நானும் அதிகாரிகளும் அங்கு சென்று உடனடியாக விசாரணை மேற்கொண்டோம். எங்களுடைய விசாரணையிலும், அங்கு எந்த சிறாரும் பணியமர்த்தப்படவில்லை என்பது மிகத் தெளிவாக உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.
எனவே, இந்தத் திட்டமிட்ட செயல், ஆவினுடைய பெயருக்கு களங்கம் விளைவிக்கின்ற நிலையிலும், எங்களுடைய வளர்ச்சிக்கு ஒரு குந்தகம் விளைவிக்கின்ற விதத்திலும் இருக்கிறது. எனவே, இந்த விவகாரத்தில் வழக்கறிஞர் நோட்டீஸ் அனுப்புவதற்கான பணி நடந்து வருகிறது. அதுமட்டுமல்ல, குழந்தைகளை தவறாக பயன்படுத்தி ஒரு நிறுவனத்துக்கு எதிராக போராடுவது போன்று திட்டமிட்டு நடந்துகொண்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க மாவட்ட குழந்தைகள் நலக்குழுவுக்கும் அறிவுரை வழங்கப்பட்டிருக்கிறது. அவர்களும் விசாரணையை மேற்கொண்டுள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.