இளம் வயது திருமணத்தால் பிரசவத்தின் போது இறப்பு ஏற்படுகிறது
இளம் வயது திருமணத்தால், பிரசவத்தின்போது இறப்பு ஏற்படுவதாக இணை இயக்குனர் மாரிமுத்து தெரிவித்தார்.
இளம் வயது திருமணத்தால், பிரசவத்தின்போது இறப்பு ஏற்படுவதாக இணை இயக்குனர் மாரிமுத்து தெரிவித்தார்.
அதிக இறப்பு
திருப்பத்தூர் மாவட்ட மருத்துவம் மற்றும் ஊரக நலப் பணிகள் இணை இயக்குனர் அலுவலக கூட்ட அரங்கில் மாவட்ட ஒருங்கிணைந்த அவசர பேறுகால மகப்பேறு பச்சிளம் குழந்தை சிகிச்சை பராமரிப்பு மையத்தின் ஒருங்கிணைப்பு ஆய்வு கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு மாவட்ட சுகாதார பணிகள் இணை இயக்குனர் மாரிமுத்து தலைமை தாங்கி பேசியதாவது:-
தமிழ்நாட்டில் சராசரியாக கர்ப்பிணி பெண்கள் இறப்பு 1 லட்சத்திற்கு 60 ஆக உள்ளது. நமது மாவட்டத்தில் மட்டும் 94.4 சதவீதம் உள்ளது. இதற்கு முக்கிய காரணம் இளம் வயது திருமணம் ஆகும். வாணியம்பாடி, ஆம்பூர் பகுதியில் அதிகமாக இளம் வயது திருமணம் நடைபெற்றது. இளம் வயது திருமணத்தால் கர்ப்பம் தரிப்பதன் காரணமாக அதிக இறப்புகள் ஏற்படுகிறது.
பதிவு செய்வது அவசியம்
அதேபோல் 40 வயதை கடந்த பெண்கள் கர்ப்பம் தரிப்பதால் மகப்பேறு காலத்தில் இறப்பு ஏற்படுகிறது. 10 கர்ப்பிணி பெண்கள் இறப்பு ஏற்படுவதில் சரிபாதி 5 இறப்பு இளம்வயதில் குழந்தை பெறுவதால் ஏற்படுகிறது. இதற்கு முக்கிய காரணம் 16 வயதில் திருமணம் செய்து கர்ப்பம் ஆகும் பெண்கள் அதை பதிவு செய்ய அரசு மருத்துவமனைக்கு வருவதில்லை.
மாவட்டத்தில் அரசு மருத்துவமனைகள் மற்றும் ஆரம்ப சுகாதார நிலையங்களில் ஒரு மாதத்தில் 1,000 பிரசவங்கள் நடக்கிறது. இதில் 90 பிரசவங்கள் வாணியம்பாடி பகுதிகளில் இளம்வயது கர்ப்பிணி பெண்களுக்கு பிரசவம் நடக்கிறது. கர்ப்பிணி பெண்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறலாம். ஆனால் அரசு மருத்துவமனையில் பதிவு செய்து கொள்வது அவசியம் ஆகும். அனைத்து மகப்பேறு மருத்துவர்களும் சிறந்த முறையில் கர்ப்பிணி பெண்களுக்கு சிகிச்சை அளிக்க வேண்டும். 12 லட்சம் மக்கள் தொகை கொண்ட மாவட்டத்தில் கர்ப்பிணி பெண்கள் இறப்பு விகிதத்தை 0 ஆக மாற்ற அனைத்து மகப்பேறு மருத்துவர்கள் ஒத்துழைக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்
கூட்டத்தில் சுகாதாரப் பணிகள் துணை இயக்குனர் செந்தில், அனைத்து மருத்துவ அலுவலர்கள், வட்டார மருத்துவ அலுவலர்கள், மகப்பேறு மருத்துவர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.