குழந்தை திருமணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்

பாப்பாரப்பட்டி பகுதியில் குழந்தை திருமணங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஜனநாயக மாதர் சங்க மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

Update: 2022-08-10 16:51 GMT

பாப்பாரப்பட்டி:

பாப்பாரப்பட்டியில் அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க 3-வது வட்டார மாநாடு நடைபெற்றது. இதற்கு சத்யா தலைமை தாங்கினார். மாவட்ட துணைத்தலைவர் பூபதி மாநாட்டை தொடங்கி வைத்து பேசினார். மாவட்ட செயலாளர் கிரைஸாமேரி கலந்து கொண்டு பேசினார். வட்டார செயலாளர் ராஜாமணி அறிக்கை சமர்ப்பித்தார். நிர்வாகிகள் காவேரியம்மாள், பவித்ரா, சத்யா, உமாராணி, தெய்வானை, அஞ்சலி, ரகுமணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

மாநாட்டில், பாப்பாரப்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தை சிறப்பு பிரிவுகளுடன் கூடிய வட்டார மருத்துவமனையாக தரம் உயர்த்த வேண்டும். பாப்பாரப்பட்டி பகுதியில் குழந்தை திருமணங்கள், பெண்கள் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பாப்பாரப்பட்டி பேரூராட்சியில் 100 நாள் வேலை வழங்க வேண்டும். தினசரி குடிநீர் வழங்க வேண்டும். குடிநீர் கட்டணம் மற்றும் குடிநீர் இணைப்பு டெபாசிட் தொகை ஆகியவற்றை குறைக்க வேண்டும். மலையூர் கிராமத்திற்கு அரசு பஸ் இயக்கவேண்டும். தர்மபுரியில் இருந்து பாப்பாரப்பட்டிக்கு நிறுத்தப்பட்ட டவுன் பஸ்களை மீண்டும் இயக்க வேண்டும். தாழ்த்தப்பட்ட பழங்குடி மக்களுக்கு இலவச தொகுப்பு வீடுகள் கட்டித்தர வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags:    

மேலும் செய்திகள்