குழந்தை தொழிலாளர்களை பணி அமர்த்த கூடாது-கலெக்டர் அனிஷ்சேகர் எச்சரிக்கை
குழந்தை தொழிலாளர்களை பணி அமர்த்த கூடாது என்று கலெக்டர் அனிஷ்சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
மதுரை,
குழந்தை தொழிலாளர்களை பணி அமர்த்த கூடாது என்று கலெக்டர் அனிஷ்சேகர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
விழிப்புணர்வு
குழந்தை தொழிலாளர் எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு மதுரை மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நேற்று நடந்தது. மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர்.பஸ் நிலையத்தில் நடந்த விழிப்புணர்வு நிகழ்ச்சியினை கலெக்டர் அனிஷ்சேகர் தொடங்கி வைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த ஓராண்டில் குழந்தை தொழிலாளர் ஒழிப்பிற்காக தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொண்டு உள்ளது. தொழிலாளர் நலத்துறை மற்றும் குழந்தைகள் பாதுகாப்புத் துறைகள் மூலமாக 2 ஆயிரத்து 593 நிறுவனங்களில் ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது. அதில் 17 நிறுவனங்களிடம் இருந்து ரூ.2 லட்சத்து 45 ஆயிரம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 10 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. எந்த ஒரு நிறுவனமும் குழந்தை தொழிலாளர்களை பணியில் ஈடுபடுத்தக்கூடாது.
விருது
இது தொடர்பாக அனைத்து நிறுவனங்களும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. குழந்தைகளுடைய உரிமைகள் பாதுகாக்கப்பட வேண்டும். குழந்தைகளின் எதிர்காலம் சிறப்பாக அமைவதற்கு 16 வயது வரையுள்ள அனைத்து குழந்தைகளும் கல்வி பயில்வது அவசியம். மேலும் குழந்தை தொழிலாளர் முறையை அகற்றுவதற்கு சிறப்பான நடவடிக்கை மேற்கொண்டதற்காக மதுரை மாவட்ட தொழிலாளர் நலத்துறைக்கு முதல்-அமைச்சர் விருது வழங்கி உள்ளார்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதனைத்தொடர்ந்து மாட்டுத்தாவணி எம்.ஜி.ஆர். பஸ் நிலையத்தில் அமைக்கப்பட்டு இருந்த மாபெரும் கொரோனா தடுப்பூசி முகாமினை கலெக்டர் அனிஷ் சேகர், மாநகராட்சி கமிஷனர் சிம்ரன்ஜீத்சிங் காலோன் ஆகியோர் பார்வையிட்டனர். இந்த நிகழ்ச்சிகளில் தொழிலாளர் இணை ஆணையர் சுப்பிரமணியன், கூடுதல் தொழிலாளர் ஆணையர் குமரன், தொழிலாளர் துணை ஆணையர் லிங்கம், தொழிலாளர் உதவி ஆய்வாளர் மைவிழிச்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர்.