உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சுகள் பிரசவம் பார்த்தபோது பச்சிளம் குழந்தைக்கு கை முறிந்தது-சுகாதாரத்துறையினர் விசாரணை

Update: 2022-11-01 18:45 GMT

ஓசூர்:

உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சுகள் பிரசவம் பார்த்தபோது பச்சிளம் குழந்தைக்கு கை முறிந்தது குறித்து சுகாதாரத்துறையினர் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

பச்சிளம் குழந்தை

கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அருகே உள்ள கொத்தூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார் (வயது 23). கட்டிட தொழிலாளி. இவருடைய மனைவி வசந்தா (22). இந்த தம்பதிக்கு 3 வயதில் மோனிஷ் என்ற மகன் உள்ளான். இந்தநிலையில் வசந்தா 2-வதாக கர்ப்பமடைந்தார். கடந்த 20-ந் தேதி அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டதை தொடர்ந்து உத்தனப்பள்ளி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் அவர் அனுமதிக்கப்பட்டார்.

அன்று மாலை அவருக்கு சுக பிரசவத்தில் அழகான ஆண் குழந்தை பிறந்தது. டாக்டர் இல்லாததால் நர்சுகள் பிரசவம் பார்த்தபோது, அந்த குழந்தைக்கு கையில் எலும்பு முறிவு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இது குறித்து நர்சுகள் பச்சிளம் குழந்தையின் பெற்றோரிடம் தகவல் தெரிவிக்காமல், ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் குழந்தைக்கு உரிய சிகிச்சை அளிக்காமல் அனுப்பி வைத்ததாக கூறப்படுகிறது.

3 இடங்களில் முறிவு

அங்கு குழந்தையை டாக்டர்கள் பரிசோதித்த போது, கையில் எலும்பு முறிவு ஏற்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து ஸ்கேன் செய்தபோது, குழந்தையின் கையில் 3 இடங்களில் முறிவு ஏற்பட்டு இருந்தது தெரியவந்தது. தொடர்ந்து டாக்டர்கள் குழந்தைக்கு உரிய சிகிச்சை அளித்து, கையில் கட்டு போட்டனர். மேலும் பச்சிளம் குழந்தைகள் பிரிவில் வைத்து தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுகுறித்து மாவட்ட சுகாதார துறையில் புகார் அளிக்கப்பட்டது. அதன்பேரில் சுகாதாரத்துறை அதிகாரிகள் குழந்தைக்கு கை முறிவு ஏற்பட்டது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் நர்சுகள் பிரசவம் பார்த்ததால் பச்சிளம் குழந்தைக்கு கை முறிவு ஏற்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்