சத்திரப்பட்டி அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி குழந்தை பலி
சத்திரப்பட்டி அருகே டிராக்டர் சக்கரத்தில் சிக்கி குழந்தை பரிதாபமாக இறந்தது.
மதுரை அருகே உள்ள சற்குடியை சேர்ந்தவர் ரஞ்சித். அவருடைய மகன் விஷ்வா (வயது 2). ரஞ்சித் தனது குடும்பத்தினருடன், திண்டுக்கல் மாவட்டம் சத்திரப்பட்டி அருகே தா.புதுக்கோட்டையில் உள்ள தனியார் செங்கல் சூளையில் தங்கியிருந்து வேலை செய்து வருகிறார்.
நேற்று காலை சூளையில் ரஞ்சித் வேலை செய்து கொண்டிருந்தார். அவர் அருகே விஷ்வா விளையாடி கொண்டிருந்தான். அப்போது அங்கு மினி டிராக்டர் ஒன்று செங்கற்களை ஏற்றி கொண்டு வந்தது. அதன் பின்சக்கரத்தில் எதிர்பாராதவிதமாக விஷ்வா சிக்கி கொண்டான். இதில் படுகாயம் அடைந்த விஷ்வாவை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பழனி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி விஷ்வா பரிதாபமாக இறந்தான். இதுகுறித்து சத்திரப்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.