குட்டையில் மூழ்கி 2 வயது பெண் குழந்தை சாவு

குட்டையில் மூழ்கி 2 வயது பெண் குழந்தை இறந்தது.

Update: 2022-06-28 17:11 GMT

நன்னிலம் அருகே தாய் மாமா திருமணத்துக்கு பெற்றோருடன் வந்த 2 வயது பெண் குழந்தை குட்டையில் மூழ்கி பரிதாபமாக இறந்தது.

2 வயது குழந்தை

தஞ்சை மாவட்டம் நாச்சியார்கோவில் அருகே உள்ள துக்காச்சி பகுதியை சேர்ந்தவர் பிரபாகரன். இவருடைய மனைவி வேம்பு. இவர்களுடைய 2 வயது மகள் ருத்ரவீணா. வேம்புவின் தம்பி மோகன் திருமணம் நேற்று  நடந்தது.

இந்த திருமண நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக பிரபாகரன், தனது மனைவி வேம்பு மற்றும் மகள் ருத்ரவீணாவுடன் திருவாரூர் மாவட்டம் நன்னிலம் அருகே அதம்பாரில் உள்ள மோகன் வீட்டுக்கு வந்திருந்தார்.

குட்டையில் மூழ்கி சாவு

இவர்கள் நேற்று திருமணம் முடிந்ததும், மோகன் வீட்டில் தங்கி இருந்தனர். அப்போது குழந்தை ருத்ரவீணா, வீட்டின் அருகே விளையாடிக்கொண்டிருந்தபோது எதிர்பாராதவிதமாக குட்டையில் சறுக்கி விழுந்தாள். இந்த நிலையில் குழந்தையை காணாமல் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பல இடங்களில் தேடினர்.

அப்போது குட்டையில் மூழ்கி குழந்தை பரிதாபமாக இறந்தது தெரியவந்தது. குட்டையில் கிடந்த குழந்தையின் உடலை உறவினர்கள் மீட்டனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து தகவல் அறிந்த நன்னிலம் போலீசார் அங்கு சென்று குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக நன்னிலம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் இதுகுறித்து நன்னிலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். தாய்மாமன் திருமணத்துக்கு வந்த குழந்தை குட்டையில் மூழ்கி பலியானது அந்த பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. 

Tags:    

மேலும் செய்திகள்