ஓசூர்:-
பேரிகை அருகே மின்சாரம் தாக்கி குழந்தை பலியானது. வீட்டு முன் விளையாடிய போது மின் ஒயரை தொட்டதால் இந்த பரிதாப சம்பவம் நடந்துள்ளது.
3 வயது குழந்தை
கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரி தாலுகா பெத்த சிகரலப்பள்ளி அருகே இட்டிப்பள்ளிகுட்டாயை சேர்ந்தவர் மாரப்பா. இவருடைய மனைவி பத்மா (35). இவர்களுக்கு 2 மகள்களும், திலக் (3) என்ற மகனும் இருந்தனர்.
நேற்று முன்தினம் குழந்தை திலக் பேரிகை அருகே சூளகுண்டாவில் உள்ள தனது வீட்டு அருகில் விளையாடிக் கொண்டிருந்தது. அப்போது அந்த பகுதியில் தொங்கிக்கொண்டிருந்த சேதமான மின்சார ஒயரை தொட்டதாக கூறப்படுகிறது.
போலீஸ் விசாரணை
இதில் மின்சாரம் தாக்கி குழந்தை திலக் சம்பவ இடத்திலேயே உயிர் இழந்தது.. தகவல் அறிந்ததும் பேரிகை போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.
திலக் உடலை போலீசார் மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.