டாக்டர்கள் இல்லாமல் நர்சுகள் பிரசவம் பார்த்ததால் குழந்தை சாவு

செங்குன்றம் அருகே டாக்டர்கள் இல்லாமல் நர்சுகள் பிரசவம் பார்த்ததால் இளம்பெண்ணுக்கு பிறந்த ஆண் குழந்தை இறந்துவிட்டது. இதுபற்றி பெண்ணின் உறவினர்கள் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

Update: 2022-10-02 23:49 GMT

செங்குன்றம்,

செங்குன்றத்தை அடுத்த அலமாதி அம்பேத்கர் நகரைச் சேர்ந்தவர் பாலாஜி. இவருடைய மனைவி மித்ரா(வயது 20). நிறைமாத கர்ப்பிணியான இவர், பிரசவத்துக்காக அலமாதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் சேர்க்கப்பட்டார்.

நேற்று முன்தினம் இரவு அவருக்கு பிரசவ வலி ஏற்பட்டது. ஆனால் அந்த நேரத்தில் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் யாரும் இல்லை என கூறப்படுகிறது.

குழந்தை சாவு

இதனால் அங்கிருந்த நர்சுகளே, மித்ராவுக்கு பிரசவம் பார்த்தனர். மித்ராவுக்கு ஆண் குழந்தை பிறந்து, சிறிது நேரத்தில் இறந்துவிட்டது. மேலும் தாய்க்கும் அதிகரத்தப்போக்கு ஏற்பட்டது. உடனடியாக மித்ராவை சென்னை ராயபுரத்தில் உள்ள அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

இதனால் அதிர்ச்சி அடைந்த மித்ராவின் உறவினர்கள், ஆரம்ப சுகாதார நிலையத்தில் டாக்டர்கள் இல்லாமல் நர்சுகளே பிரசவம் பார்த்ததால் குழந்தை இறந்து விட்டதாக சோழவரம் போலீசில் புகார் செய்தனர். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் ஜெகநாதன் விசாரணை நடத்தி வருகிறார். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

மேலும் செய்திகள்