இண்டூர் அருகே பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை சாவு

Update: 2023-06-10 19:30 GMT

பாப்பாரப்பட்டி

இண்டூர் அருகே பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை இறந்தது.

ஆண் குழந்தை சாவு

தர்மபுரி மாவட்டம் இண்டூர் அருகே உள்ள ராஜாகொல்லஅள்ளியை சேர்ந்தவர் முத்தழகன். இவரது மனைவி பட்டு (வயது 23). நிறைமாத கர்ப்பிணியாக இருந்த பட்டுக்கு கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு அழகான ஆண் குழந்தை பிறந்தது. இதனிடையே நேற்று முன்தினம் இரவு அந்த குழந்தைக்கு காய்ச்சல் ஏற்பட்டுள்ளது.

தொடர்ந்து குழந்தையின் மூக்கில் ரத்தம் வடிந்ததாக கூறப்படுகிறது. இதனால் அதிர்ச்சி அடைந்த பெற்றோர் குழந்தையை தர்மபுரி அரசு ஆஸ்பத்திரிக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு டாக்டர்கள் குழந்தையை பரிசோதித்து பார்த்தனர். அப்போது குழந்தை ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

போலீசார் விசாரணை

இதுகுறித்து இண்டூர் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பேரில் போலீசார் விரைந்து வந்து குழந்தையின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். பிறந்து ஒரு மாதமே ஆன ஆண் குழந்தை இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்