பிச்சை எடுக்கும் குழந்தைகளை மீட்டு மறுவாழ்வு அளிக்க வேண்டும்

பிச்சை எடுக்கும் குழந்தைகளை மீட்டு மறுவாழ்வு அளிக்க வேண்டும் என்று கலெக்டர் விசாகன் உத்தரவிட்டார்.

Update: 2023-03-29 17:15 GMT

ஆலோசனை கூட்டம்

திண்டுக்கல் கலெக்டர் அலுவலகத்தில், குழந்தைகள் நலன் மற்றும் பாதுகாப்பு குழு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதற்கு கலெக்டர் விசாகன் தலைமை தாங்கினார். இதில் மாவட்ட வருவாய் அலுவலர் லதா, கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு வெள்ளைச்சாமி, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வளர்ச்சி) ராணி, மாவட்ட சமூக நல அலுவலர் புஷ்பகலா, குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சிவக்குமார், குழந்தைகள் நலக்குழு உறுப்பினர்கள், இளைஞர்நீதி குழும உறுப்பினர்கள் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

பிச்சை எடுக்கும் குழந்தைகள்

இந்த கூட்டத்தில் குழந்தைகள் பாதுகாப்பு தொடர்பாக கலெக்டர் விசாகன் ஆலோசனை வழங்கினார். அப்போது அவர் பேசியதாவது:-

நேருயுவகேந்திரா, மகளிர் சுயஉதவிக்குழுக்களில் சிறப்பாக செயல்படும் நபர்களை தேர்வு செய்து குழந்தைகள் பாதுகாப்பு தன்னார்வலர்களாக ஈடுபடுத்த வேண்டும். இதற்காக அவர்களுக்கு முறைப்படி பயிற்சி அளிக்க வேண்டும். மேலும் மாவட்டம் முழுவதும் சோதனை நடத்தி பிச்சை எடுக்கும் குழந்தைகளை கண்டறிய வேண்டும். அந்த குழந்தைகளை மீட்பதோடு மறுவாழ்வு அளிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இளைஞர் நீதிச்சட்டத்தில் செயல்படும் குழந்தைகள் பராமரிப்பு இல்லங்களில், மாதந்தோறும் மருத்துவ முகாம் நடத்த வேண்டும். கிராம சுகாதார செவிலியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், தலைமை ஆசிரியர்கள், குழந்தைகள் நல போலீசார் ஆகியோருக்கு குழந்தைகளின் உரிமைகள் மற்றும் பாதுகாப்பு, குழந்தைகள் நலன் தொடர்பான சட்டங்கள் குறித்து பயிற்சி அளிக்க வேண்டும்.

இவ்வாறு கலெக்டர் விசாகன் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்