சிக்கல் சிங்காரவேலவர் கோவில் தேரோட்டம்

கந்தசஷ்டி விழாவையொட்டி சிக்கல் சிங்காரவேலவர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

Update: 2022-10-29 18:45 GMT

சிக்கல்:

கந்தசஷ்டி விழாவையொட்டி சிக்கல் சிங்காரவேலவர் கோவில் தேரோட்டம் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர்.

சிக்கல் சிங்காரவேலவர் கோவில்

நாகை மாவட்டம் சிக்கலில் சிங்காரவேலவர் கோவில் உள்ளது. இந்த கோவில் புகழ்பெற்ற முருகன் தலங்களில் ஒன்றாகும். ஒவ்வொரு ஆண்டும் ஐப்பசி மாதம் இந்த கோவிலில் நடைபெறும் கந்தசஷ்டி திருவிழா பிரசித்தி பெற்றது.

இக்கோவிலில் உள்ள வேல்நெடுங்கன்னி அம்மனிடம், முருகன் வேல் வாங்கி திருச்செந்தூரில் சூரசம்ஹாரம் செய்ததாக கந்தபுராணத்தில் கூறப்பட்டுள்ளது.

கந்தசஷ்டி விழா

வேல்நெடுங்கன்னியிடம், வேல் வாங்கும் போது முருகனின் முகம் மற்றும் திருமேனி முழுவதும் வியர்வை சிந்தும் அற்புத காட்சி இன்றளவும் காணப்படுகிறது. இந்த காட்சியை காண பல்வேறு மாவட்டங்களில் இருந்து திரளான பக்தா்கள் கலந்து கொள்வார்கள். இந்த ஆண்டு கந்தசஷ்டி விழா கடந்த 25-ந் தேதி காப்புக்கட்டுதலுடன் தொடங்கியது.

தேரோட்டம்

விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் நேற்று காலை 7.30 மணிக்கு நடந்தது. முன்னதாக சிறப்பு அலங்காரத்தில் முருகபெருமான் வள்ளி, தெய்வானையுடன் தேரில் எழுந்தருளினார். இதை தொடர்ந்து தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். தேர் நான்கு வீதிகளில் சென்று நண்பகல் 11.40 மணிக்கு தேர்நிலையை அடைந்தது.

தேரோட்டத்தில் நாகை இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் ராணி, கோவில் செயல் அலுவலர் முருகன் மற்றும் கோவில் பணியாளர்கள், திருப்பணி குழுவினர், கிராம மக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சக்திவேல் வாங்கும் நிகழ்ச்சி

இதை தொடர்ந்து இரவு வேல் நெடுங்கன்னி அம்மனிடம், சிங்காரவேலவர் சக்திவேல் வாங்கினார். பிறகு சிங்காரவேலவருக்கு வியர்வை சிந்தும் காட்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வேல் வாங்கும் நிகழ்ச்சியை முன்னிட்டு நாகை போலீஸ் சூப்பிரண்டு ஜவஹர் உத்தரவின் பேரில், துணை போலீஸ் சூப்பிரண்டு பாலகிருஷ்ணன் தலைமையில் 200-க்கு மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்