கிராமப்புற திட்டங்களில் கூடுதல் கவனம் தேவை கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் உத்தரவு
கிராமப்புற திட்டங்களில் கூடுதல் கவனம் தேவை என்று கலெக்டர்களுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார்.
மதுரை,
மதுரை கலெக்டர் அலுவலகத்தில் "கள ஆய்வில் முதல்-அமைச்சர்" திட்டத்தின் கீழ், 5 மாவட்டங்களின் அதிகாரிகளுடன் ஆய்வுக்கூட்டம் நேற்று நடந்தது. அமைச்சர்கள் நேரு, பெரியசாமி, சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, உதயநிதி ஸ்டாலின், பெரியகருப்பன், ராஜகண்ணப்பன், சக்கரபாணி, மூர்த்தி, பழனிவேல் தியாகராஜன், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம், சிவகங்கை, தேனி மாவட்ட கலெக்டர்கள் பங்கேற்றனர்.
கூட்டத்துக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை தாங்கி பேசியதாவது:-
கூடுதல் கவனம்
அரசு அறிவித்துள்ள பல்வேறு முக்கிய வளர்ச்சி திட்டங்களை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டிய முக்கிய பொறுப்பு உங்களுக்கு உள்ளது.
கிராமங்களில் மக்களின் வருமானத்தை பெருக்கவும், வாழ்வாதாரத்தை உயர்த்தவும் செயல்படுத்தப்படும் திட்டங்களில், நீங்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித்திட்டம், கலைஞரின் அனைத்து கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சி திட்டம் ஆகியவற்றில் நல்ல முன்னேற்றம் ஏற்பட வேண்டும். ஏழை, எளிய மற்றும் விவசாய மக்களின் வாழ்வாதாரத்தோடு நேரடி தொடர்புடைய திட்டங்களாக இவை உள்ளன.
வேலை உறுதி திட்டத்தின் கீழ் குடும்பங்களுக்கு வேலை வழங்கப்படும் சராசரி நாட்களை உயர்த்துவதற்கு தேவையான நடவடிக்கையை மேற்கொள்ளுங்கள். அதேபோல், அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டத்தின் கீழ் உங்களுக்கு வழங்கப்பட்ட தொகையை விரைந்து முழுமையாக செலவு செய்து முடியுங்கள். இன்றைய ஆய்வின்படி, கடந்த ஆண்டுக்கான அண்ணா மறுமலர்ச்சி திட்ட பணிகள் அதிக அளவில் நிலுவையில் இருப்பதை கருத்தில் கொண்டு பணிகளை துரிதப்படுத்துங்கள்.
அரசின் முன்னுரிமை இனங்கள் என்னென்ன என்பதை கலெக்டர்கள் தெளிவாக உணர்ந்து, அவற்றிற்கு முன்னுரிமை அளித்து, அத்திட்டங்களை துரிதப்படுத்தி மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டும். சமுதாயத்தில் பின்தங்கிய நிலையில் உள்ள மக்கள், மாற்றுத்திறனாளிகள், குழந்தைகள், அரசு ஆஸ்பத்திரியை நாடும் ஏழை, எளிய மக்கள், அரசு பள்ளிகள் மற்றும் விடுதிகளில் தங்கிப்படிக்கும் மாணவ, மாணவியர், திருநங்கையர் தேவைகளை, குறைகளை அறிந்து அவற்றை நிறைவேற்றி தரவேண்டியது நம் அனைவருடைய கடமை.
அதிகாரிகளுக்கு பெரும் பொறுப்பு
புதிய திட்டங்களை நீங்கள் பட்டியலிட்டு பார்த்தால் அவற்றில் ஓங்கி ஒலிப்பது சமூக நீதியின் குரல், அனைவருக்குமான பொருளாதார வளர்ச்சி, இளைஞர்களுக்கான திறன் மேம்பாடு மற்றும் பயிற்சி, பெண் கல்வி, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, தமிழ் மொழி மற்றும் அதன் வரலாற்று தொன்மைகளை போற்றி பாதுகாத்து அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்லுதல் என குறிப்பிட்டு சொல்லலாம். அத்தகைய பணிகளுக்கெல்லாம் நீங்களும் முக்கியத்துவம் கொடுங்கள்.
உங்கள் மாவட்டத்திற்கே உரிய தனிப்பட்ட சூழ்நிலைக்கான திட்டங்களையும் அரசுக்கு எடுத்துக்கூறி அவற்றை செயல்படுத்த தகுந்த முன்னெடுப்புகளை மேற்கொள்ள வேண்டும். அரசு எத்தகைய பெரிய திட்டங்களை வகுத்தாலும், அதனை சிந்தாமல், சிதறாமல் மக்களிடம் கொண்டு சேர்க்க வேண்டிய பெரும் பொறுப்பு கலெக்டர்களுக்கும், அதிகாரிகளுக்கும்தான் உள்ளது.
மக்கள் மனு
கலெக்டர்கள் கவனம் செலுத்த வேண்டிய மற்றுமொரு முக்கியமான இனம், பட்டா மாறுதல் அதாவது, பட்டாக்களில் திருத்தங்கள் மேற்கொள்ளுதல், சான்றிதழ்களை குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்குதல் போன்றவை. இதற்கான வழிமுறைகள் முறையாக வகுக்கப்பட வேண்டும். இதனை நான் அடுத்த ஆய்வுக்கூட்டத்தின் போது கட்டாயம் சரிபார்ப்பேன்.
பெரும் நம்பிக்கையோடு மக்கள் உங்களை நாடி வந்து மனுக்களை கொடுக்கின்றார்கள். மனுக்கள் என்பது வெறும் காகிதம் அல்ல. அவை மனிதரின் வாழ்க்கை, கனவு, எதிர்காலம் என கருத வேண்டும். மக்களை பொறுத்தவரை நீங்கள்தான் அரசு. எனவே, உங்களிடம் அளிக்கும் மனுக்களுக்கு இயன்றவரை முயற்சி எடுத்து, அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றி உரிய தீர்வை பெற்றுத்தர வேண்டும்.
இவ்வாறு மு.க.ஸ்டாலின் பேசினார்.