முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி
தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி தொடங்கியது. முதல்நாளில் 2,500 பேர் பங்கேற்றனர்.
தஞ்சாவூர், பிப்.1-
தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டி தொடங்கியது. முதல்நாளில் 2,500 பேர் பங்கேற்றனர்.
விளையாட்டு போட்டி
தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தஞ்சை அன்னை சத்யா விளையாட்டு மைதானத்தில் மாவட்ட அளவிலான தமிழ்நாடு முதல்-அமைச்சர் கோப்பைக்கான விளையாட்டு போட்டிகள் தொடக்கவிழா நேற்றுகாலை நடந்தது. இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார். விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு விளையாட்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.போட்டிகளில் பல்வேறு கல்லூரிகளை சேர்ந்த 2,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். இவர்களுக்கு தனித்தனியாக போட்டிகள் நடத்தப்பட்டன. கபடி, சிலம்பம், கூடைப்பந்து, இறகுபந்து, கால்பந்து, ஆக்கி, வாலிபால், மேசைபந்து, கிரிக்கெட் ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இந்த போட்டி வருகிற 30-ந் தேதி நடக்கிறது. குறிப்பிட்ட நாட்களில் மட்டுமே போட்டிகள் நடத்தப்படும்.
நலத்திட்ட உதவிகள்
தஞ்சை பேரறிஞர் அண்ணா நூற்றாண்டு அரங்கில் புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் அரசு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. இதில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு ரூ.48 கோடியே 29 லட்சத்து 47 ஆயிரம் மதிப்பில் 58 புதிய கட்டிடங்களுக்கு அடிக்கல் நாட்டியதுடன், ரூ.9 கோடியே 92 லட்சத்து 34 ஆயிரம் மதிப்பில் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.இதில் எம்.எல்.ஏ.க்கள் டி.கே.ஜி.நீலமேகம், அண்ணாதுரை, மாநகராட்சி மேயர் சண்.ராமநாதன், மாவட்ட ஊராட்சிக்குழு தலைவி உஷா புண்ணியமூர்த்தி, துணை மேயர் அஞ்சுகம்பூபதி, மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் முத்து, மாவட்ட விளையாட்டு அலுவலர் டேவிட் டேனியல், கூட்டுறவு சங்கங்களின் மண்டல இணைப்பதிவாளர் தமிழ்நங்கை, மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலர் ரேணுகாதேவி, மகளிர் திட்ட இயக்குனர் லோகேஸ்வரி, தாட்கோ மாவட்ட மேலாளர் ரெங்கராஜன் மற்றும் அனைத்துத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.