'கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்'; பிரதமர் பங்கேற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

‘கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்’ என்று திண்டுக்கல்லில் பிரதமர் பங்கேற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Update: 2022-11-11 18:22 GMT

'கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்ற வேண்டும்' என்று திண்டுக்கல்லில் பிரதமர் பங்கேற்ற விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

மு.க.ஸ்டாலின் பேச்சு

திண்டுக்கல் மாவட்டம் காந்திகிராம பல்கலைக்கழகத்தில் பட்டமளிப்பு விழா நேற்று நடைபெற்றது. இதில், பிரதமர் நரேந்திர மோடி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு, மாணவ-மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். இந்த விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு பேசியதாவது:-

குஜராத்தில் பிறந்து ஒற்றுமை, சமூக நல்லிணக்கத்தை வலியுறுத்தி இந்திய தேசத்தின் தந்தையாக வலம் வந்த காந்தியடிகளுக்கும் தமிழ்நாட்டுக்குமான தொடர்பு மிக மிக அதிகம். தனது வாழ்நாளில் 26 முறை தமிழ்நாட்டிற்கு காந்தியடிகள் வந்தார். தமிழை விரும்பிக் கற்றவர். மோ.க.காந்தி என்று தமிழில் கையெழுத்திட்டார். திருக்குறளைப் படிப்பதற்காகவே தமிழ் கற்க வேண்டும் என்று சொன்னவர்.

இவை அனைத்துக்கும் மேலாக உயராடை அணிந்து அரசியல் வாழ்க்கைக்குள் நுழைந்த அவரை அரையாடை கட்ட வைத்தது இந்தத் தமிழ் மண்! வட இந்தியாவினர் அனைவரும் ஒரு தென்னிந்திய மொழியை கற்க வேண்டும் அது தமிழாக இருக்க வேண்டும் என்று சொன்னவர் காந்தியடிகள். அத்தகைய காந்தியடிகளின் பெயரால் அமைந்த பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் பங்கேற்பது மகிழ்ச்சியாக இருக்கிறது.

உயர்கல்வியில் சிறந்த மாநிலம்

தமிழ்நாட்டில் இன்று மாநில அரசின் கட்டுப்பாட்டின் கீழ் 22 பல்கலைக்கழகங்கள் இயங்கி வருகின்றன. இவை கலை, அறிவியல், பொறியியல் கல்வியியல், விளையாட்டு, கால்நடை, மருத்துவம், மீன்வளம், தமிழ்வளர்ச்சி, சட்டம், வேளாண்மை மற்றும் இசை ஆகிய துறைகளின் கீழ் திறம்பட செயல்படுகின்றன. தமிழ்நாடு, இந்தியாவிலேயே உயர்கல்வியில் சிறந்து விளங்கும் மாநிலமாகத் திகழ்கிறது.

இதனை மேலும் வலிமைப்படுத்தும் வகையில் மாநில அரசு பல்வேறு கல்வித் திட்டங்களைத் தீட்டி வருகிறது. பெண்களின் உயர் கல்வியை ஊக்குவிக்க "புதுமைப் பெண்" என்கிற மூவலூர் ராமாமிர்தம்மாள் பெயரில் உயர்கல்வி உறுதித் திட்டம், அரசுப் பள்ளி மாணவர்கள் பயன்பெறும் வகையில் உயர்கல்வியில் 7.5 சதவீத உள்ஒதுக்கீடு, ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம். போன்ற உயர்கல்வி நிறுவனங்களில் பயில நிதியுதவி திட்டம் ஆகியவை மூலம் அனைவரும் உயர்கல்வி பயில தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மாநில பட்டியலில் கல்வி

நான் முதல்வன், இல்லம் தேடிக் கல்வி, கல்லூரிக் கனவு உள்ளிட்ட பல்வேறு கல்வித் திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றன. இவை தமிழக எல்லையைத் தாண்டி அனைத்து மாநில அரசுகளும் உன்னிப்பாக கவனிக்கும் திட்டங்களாக அமைந்துள்ளன.

எந்த சூழ்நிலையிலும் யாராலும் பறிக்க முடியாத ஒரே சொத்து கல்வி. கல்விச் செல்வத்தை வழங்குவது ஒரு மாநில அரசின் கடமை. எனவே, கல்வியை மீண்டும் மாநிலப் பட்டியலின் கீழ் கொண்டு வர வேண்டும். மாநில அரசின் இத்தகைய முயற்சிகளை ஆதரிக்கவும், ஊக்குவிக்கவும் மத்திய அரசிடம் கேட்டுக்கொள்கிறேன்.

அரசியலமைப்பு உருவாக்கப்பட்டு நடைமுறைக்கு வந்தபோது, ​​கல்வி முதலில் மாநிலப் பட்டியலில் வைக்கப்பட்டது. அவசர காலத்தின் போது பொது பட்டியலுக்கு மாற்றப்பட்டது.

கல்வியின் இலக்கு

சமூகத்திற்கு சேவை செய்வதே கல்வியின் ஒட்டுமொத்த இலக்கு என்றார் மகாத்மாகாந்தி. அதற்கேற்ப முற்போக்கு சிந்தனையுடன், அறிவியல் சார்ந்த சமூகமாக தமிழ் சமூகத்தை கட்டமைக்க இளைஞர்களாகிய உங்களை வேண்டுகிறேன்.

உண்மை, ஒழுக்கம், வாக்கு தவறாமை, அனைவருக்கும் சமமான நீதி, மதநல்லிணக்கம், வகுப்பு ஒற்றுமை, சிறுபான்மையினர் நலன், தனிநபருக்கான மதிப்பு, ஏழைகள் நலன், அகிம்சை, தீண்டாமை விலக்கு, அதிகாரக் குவியலை எதிர்த்தல், ஏகபோகத்துக்கு எதிர்ப்பு, சுதந்திரமான சிந்தனை, அனைவர் கருத்துக்கும் மதிப்பளித்தல், கிராம முன்னேற்றம் இவைதான் காந்தியத்தின் அடிப்படை.

காந்திய நெறிமுறைகள்

இவை அனைத்தும்தான் இந்தியாவை ஒற்றுமைப்படுத்தும் விழுமியங்கள். இவற்றைக் கடைப்பிடிப்பதன் மூலமாக காந்தியின் பெயரைச் சொல்ல நம்மை நாம் தகுதிப்படுத்திக் கொள்வோம்.

இந்த விழாவில் கவுரவ டாக்டர் பட்டம் பெற்ற இசையமைப்பாளர் இளையராஜா, மிருதங்க வித்வான் உமையாள்புரம் சிவராமன், பட்டம் பெற்றுள்ள மாணவ-மாணவிகளை வாழ்த்துகிறேன். காந்திய நெறிமுறைகளைக் கடைப்பிடித்து, அதன்படி நடந்து காட்டுபவர்களாக இளைஞர்கள், மாணவர்கள் இருக்க வேண்டும்.

இவ்வாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசினார்.

Tags:    

மேலும் செய்திகள்