கோவையில் சாலைப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு

கோவையில் ரூ.3 கோடியில் அமைக்கப்பட்டு வரும் சாலைப்பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு செய்ததுடன், அந்த பணிகளை விரைவில் முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

Update: 2023-09-25 00:00 GMT

கோவை,

மேற்கு மண்டல தி.மு.க. வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் கூட்டம் திருப்பூர் மாவட்டம் காங்கயம் படியூரில் நேற்று நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தி.மு.க. தலைவரும், தமிழக முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 11 மணிக்கு கோவை வந்தார்.

விமான நிலையத்தில் அவருக்கு அதிகாரிகள் பூங்கொத்து கொடுத்து வரவேற்றனர். பின்னர் விமான நிலையத்தைவிட்டு வெளியே வந்த அவர், அங்கு திரண்டிருந்த கட்சி நிர்வாகிகளை சந்தித்து பேசினார்.

சாலை பணிகள் ஆய்வு

இந்த நிலையில் தமிழகத்தில் சாலை பணிகள் தரமாகவும், மக்கள் பாராட்டும் வகையில் அமைய வேண்டும் என்றும், இதில் அமைச்சர்கள், அரசுத்துறை செயலாளர்கள் தீவிர கவனம் செலுத்த வேண்டும் என்றும், நான் சுற்றுப்பயணம் செய்யும் பகுதிகளில் இது தொடர்பாக நேரடியாக சென்று கள ஆய்வு செய்ய உள்ளதாகவும், அந்த பணிகள் அனைத்தும் தரமாக இருப்பதுடன் துரிதமாக செய்து முடிக்க வேண்டும் என்றும் கண்டிப்போடு தெரிவித்து இருந்தார்.

அதன்படி முதல்-அமைச்சர், விமான நிலையத்தில் இருந்து கார் மூலம் புறப்பட்டு, கோவை மாநகராட்சி 8-வது வார்டுக்கு உட்பட்ட துளசிநகரில் 2023-24-ம் ஆண்டுக்கான மாநில நிதி குழு நிதியின் கீழ் ரூ.1.62 கோடியில் 2.04 கி.மீ. தூரத்துக்கு அமைக்கப்பட்டு வரும் தார்சாலை பணியை நேரில் ஆய்வு செய்தார்.

பொதுமக்கள் நன்றி

தொடர்ந்து மாநில நிதிக்குழு நிதியின் கீழ் 5-வது வார்டு நஞ்சப்பா நகரில் உள்ள வி.கே.வி.நகரில் ரூ.1.50 கோடியில் 2.21 கி.மீ. தூரத்தில் அமைக்கப்பட்டு வரும் சாலை பணியையும் நேரில் சென்று ஆய்வு செய்தார்.

இந்த பகுதியில் 25 ஆண்டுகளுக்கு பிறகு தற்போதுதான் சாலைபணிகள் நடந்து வருகிறது. எனவே இதற்காக அந்தப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்ததுடன், மகளிர்உரிமைத்தொகை ரூ.1,000 வழங்கியதற்கும் தங்கள் நன்றியை தெரிவித்தனர்.

விரைந்து முடிக்க உத்தரவு

சாலை பணிகளை ஆய்வு செய்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அனைத்து பணிகளையும் வடகிழக்கு பருவமழை தொடங்குவதற்கு முன்பு விரைந்து முடிக்க வேண்டும் என்று நகராட்சி நிர்வாகத்துறை, நெடுஞ்சாலைத்துறை ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் அலுவலர்கள் மற்றும் போக்கு வரத்து, காவல்துறை, மின்வாரியம், குடிநீர் வடிகால் வாரியம், தொலை தொடர்புத்துறை அலுவலர்கள், கலெக்டர், ஆணையாளர் ஆகியோருக்கு உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின்போது அமைச்சர்கள் கே.என்.நேரு, க.பொன்முடி, மற்றும் பலர் உடன் இருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்