பினராயி விஜயனுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்திப்பு

கேரளா சென்ற தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து பேசினார். அப்போது, இரு மாநிலங்களுக்கு நலன் பயக்கும் திட்ட அறிக்கையை வழங்கினார்.

Update: 2022-09-03 00:25 GMT

சென்னை,

தென் மாநில முதல்-மந்திரிகள் கூட்டம் கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் இன்று (சனிக்கிழமை) நடைபெறுகிறது.

இந்த கூட்டத்தில் பங்கேற்பதற்காக தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று காலை 11.40 மணியளவில் சென்னையில் இருந்து விமானம் மூலம் திருவனந்தபுரம் புறப்பட்டு சென்றார். அவருடன் தமிழக அரசின் தலைமை செயலாளர் வெ.இறையன்பு, முதல்-அமைச்சரின் தனி செயலாளர்கள் த.உதயச்சந்திரன், அனுஜார்ஜ், முதன்மை தனி உதவியாளர் தினேஷ்குமார் உள்ளிட்டோர் சென்றனர்.

பினராயி விஜயனுடன் சந்திப்பு

திருவனந்தபுரம் சென்றடைந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை தமிழக அரசின் தகவல் தொழில்நுட்பவியல்துறை அமைச்சர் மனோ தங்கராஜ், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ஆர்.மகேஷ், முன்னாள் அமைச்சர் சுரேஷ் ராஜன் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

பின்னர், அங்கிருந்து கோவளம் சென்ற முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், அங்கு கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனை சந்தித்து பேசினார். அப்போது, சால்வை அணிவித்ததுடன், திராவிடன் மாடல் புத்தக ஆங்கில பிரதியையும் கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனுக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

நலன் பயக்கும் திட்ட அறிக்கை

அதனைத்தொடர்ந்து, தமிழகம், கேரளம் மாநிலங்களுக்கு நலன் பயக்கும் திட்டங்கள் குறித்த அறிக்கையை கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

முதல்-மந்திரிகள் கூட்டம் முடிந்தவுடன் கேரள அரசின் சார்பில் நடத்தப்படும் கலை நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டுகளிக்கிறார். அதைத்தொடர்ந்து, இரவு 7 மணியளவில் அங்கிருந்து விமானம் மூலம் அவர் சென்னை திரும்புகிறார்.

Tags:    

மேலும் செய்திகள்