திருச்சியில் 100 நாள் வேலை திட்ட பெண்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடல்

திருச்சியில் 100 நாள் வேலை திட்ட பெண்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடினார். அப்போது, கூலி எவ்வளவு கிடைக்கிறது? எத்தனை நாட்கள் வேலை செய்கிறீர்கள்? என்று அந்த பெண்களுடன் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியாக உரையாடினார்.;

Update: 2023-06-09 19:58 GMT

திருச்சியில் 100 நாள் வேலை திட்ட பெண்களிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாடினார். அப்போது, கூலி எவ்வளவு கிடைக்கிறது? எத்தனை நாட்கள் வேலை செய்கிறீர்கள்? என்று அந்த பெண்களுடன் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியாக உரையாடினார்.

உரையாடல்

திருச்சியில் நடைபெற்று வரும் தூர்வாரும் பணிகளை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது, லால்குடி அருகே உள்ள ஆலங்குடியில் மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் கீழ் கால்வாய் வெட்டும் பணிகளை செய்துகொண்டிருந்த பெண்களிடம் மு.க.ஸ்டாலின் கலந்துரையாடினார். அப்போது, முதலாவதாக அந்த பெண்களிடம் மு.க.ஸ்டாலின் ஊர் பெயரை கேட்டார். அதற்கு பெண்கள் தங்களுடைய ஊர் பெயர் ஆலங்குடி என்று கூறினார்கள்.

கூலி எப்படி கிடைக்கிறது?

தொடர்ந்து, 100 நாள் வேலை திட்ட பெண்களிடம், மு.க.ஸ்டாலின் உரையாடினார். அந்த சுவையான உரையாடல் வருமாறு:-

மு.க.ஸ்டாலின் கேள்வி:- கூலி, சம்பளம் எல்லாம் எப்படி கிடைக்கிறது?

பெண்கள் பதில்:- ரூ.285 கொடுக்கிறார்கள்.

மு.க.ஸ்டாலின்:- பணம் எப்படி கொடுக்கிறார்கள்? வங்கி மூலம் கொடுக்கிறார்களா?

பெண்கள்:- வங்கி மூலமாக வருகிறது.

மு.க.ஸ்டாலின்:- உங்களுடைய சூப்பர்வைசர் யார்? அவர் மூலமாக பணம் வருகிறதா?

பெண்கள்:- ஆமாம்...

சாமியை பார்த்த மாதிரி...

மு.க.ஸ்டாலின்:- எத்தனை நாட்கள் வேலை செய்கிறீர்கள்?

பெண்கள்:- தொடர்ந்து வேலை செய்கிறோம்.

மு.க.ஸ்டாலின்:- தொடர்ந்து என்றால் எத்தனை நாட்கள் என்று சொல்லுங்கள்?

பெண்கள்:- 100 நாட்கள் வேலை செய்கிறோம் சார்.

மு.க.ஸ்டாலின் (சிரித்தவாறு):- 100 நாட்கள்எப்படி வேலை செய்யமுடியும்?

பெண்கள்:- உங்களை இதுவரை நேரில் பார்த்ததே இல்லை சார். இப்போது, உங்களை பார்த்ததில் ரொம்ப சந்தோசம். சாமியை பார்த்த மாதிரி இருக்கிறது.

சொன்னதை செய்கிறீர்கள்

மு.க.ஸ்டாலின்:- ஆட்சி திருப்தியாக இருக்கிறதா?

பெண்கள்:- ரொம்ப சந்தோசமாக இருக்குது சார்.

மு.க.ஸ்டாலின்:- ஏதாவது குறை இருந்தால் சொல்லுங்கள்.

பெண்கள்:- குறை எதுவும் இல்லை. நினைத்ததை நிறைவேற்றிவிட்டீர்கள் சார். மிகவும் சந்தோசம். சொன்னதை எல்லாம் செய்துகொண்டிருக்கிறீர்கள்.

மு.க.ஸ்டாலின்:- எத்தனை பேர் இங்கு வேலை செய்கிறீர்கள்?

பெண்கள்:- 75 பேர் வேலை செய்கிறோம்.

சந்தோசம், வரட்டுமா....

மு.க.ஸ்டாலின்:- இந்த வேலையை எத்தனை நாளாக செய்கிறீர்கள்?

பெண்கள்:- இன்று (நேற்று) முதல் செய்கிறோம்.

மு.க.ஸ்டாலின்:- இன்றைக்கு தான் ஆரம்பித்தீர்களா? ஏற்கனவே எங்கு வேலை செய்தீர்கள்?

பெண்கள்:- பக்கத்துல இருக்கும் இடத்தில் வேலை பார்த்தோம்.

மு.க.ஸ்டாலின்:- சரிமா, சந்தோசம்., வரட்டுமா....

இவ்வாறு உரையாடல் நடந்தது.

கோரிக்கை

இதையடுத்து, பள்ளி சென்று திரும்புவதற்கு மாணவர்களுக்கு காலை மற்றும் மாலை நேரங்களில் தங்களது கிராமங்களில் பஸ் வசதி இல்லை, வீடு கட்டுவதற்கு இட வசதி தரவேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை அந்த பெண்கள் உள்பட விவசாய தொழிலாளர்கள் மு.க.ஸ்டாலினிடம் முன்வைத்தனர். அந்த கோரிக்கைகளை அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்துவிட்டு, நிறைவேற்றி தருவதாக மு.க.ஸ்டாலின் உறுதி அளித்தார்.

Tags:    

மேலும் செய்திகள்