கொளத்தூர் தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு - புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்

சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று ஆய்வு மேற்கொண்டார். அப்போது அவர் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

Update: 2023-08-30 21:47 GMT

சென்னை கொளத்தூர் தொகுதியில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேற்று மாலை 4.30 மணி முதல் ஆய்வு பணிகளை மேற்கொள்வார் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னையில் நேற்று மதியம் 4 மணியளவில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்தது.

எனினும் கொட்டும் மழையிலும் ஆய்வு பணியை மேற்கொள்வதற்காக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வீட்டில் இருந்து புறப்பட்டார். அவர், கொளத்தூர் தொகுதிக்குள் வந்ததும் மழையின் வேகம் குறைந்தது. சாரல் போன்று மழைத்துளிகள் விழுந்தது. எனவே குடையுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆய்வு பணிகளை மேற்கொண்டார்.

தமிழ்நாடு மின்சாரம் மற்றும் மின் பகிர்மான கழகம் சார்பில் எஸ்.ஆர்.பி. கோவில் வடக்கு பிரதான சாலையில் மின்மாற்றியை சுற்றி அமைக்கப்பட்ட பாதுகாப்பு கட்டமைப்பை பார்வையிட்டார். இப்பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு மின்வாரிய அதிகாரிகளும், மாநகராட்சி கமிஷனர் டாக்டர் ராதாகிருஷ்ணனும் விளக்கி கூறினார்கள்.

பின்னர், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், திரு.வி.க.நகர் பஸ் நிலையம் அருகே நடைபெற்று வரும் ஒருங்கிணைந்த மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர், இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்று அதிகாரிகளுக்கு அறிவுறுத்தல்கள் வழங்கினார்.

இதைத்தொடர்ந்து அவர், பெரவள்ளூர் பகுதிக்குட்பட்ட ஜவகர் நகர் மாநகராட்சி பூங்காவில் ரூ.28 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் சேகரிப்பு மையம் (மழைநீரை உறிஞ்சும் பூங்கா) அமைக்கும் பணிக்கு அடிக்கல் நாட்டி, பணியையும் உடனடியாக தொடங்கி வைத்தார்.

அதே பூங்காவில் நடைபெற்ற நிகழ்ச்சியில், செல்வி நகர் 5-வது தெருவில் ரூ.14 லட்சம் செலவில் புதிய பூங்கா அமைக்கும் பணி, வி.வி.நகர் 2-வது தெருவில் அமைந்துள்ள பூங்காவில் ரூ.15 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் சேகரிப்பு மையம் அமைக்கும் பணி, பூம்புகார் நகர் 4-வது பிரதான சாலையில் அமைந்துள்ள பூங்காவில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் சேகரிப்பு மையம் அமைக்கும் பணி, பெரியார் நகர் 20-வது தெருவில் அமைந்துள்ள பூங்காவில் ரூ.26 லட்சம் மதிப்பீட்டில் மழைநீர் சேகரிப்பு மையம் அமைக்கும் பணி ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார்.

முதல்-அமைச்சரின் ஆய்வு பணியையொட்டி ஜவகர் நகர் பூங்கா மின்னொளியில் ஜொலித்தது. இதற்கிடையே மழை முற்றிலும் நின்றதால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இயல்பாக ஆய்வு பணியை தொடர்ந்தார்.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது தொகுதி மேம்பாட்டு நிதியில் கடந்த 2017-ம் ஆண்டு கட்டப்பட்ட மாநகராட்சி இறகு பந்து உள்விளையாட்டு அரங்கத்துக்கு சென்றார். அங்கு சிறுவர்-சிறுமிகள் இறகு பந்து விளையாடியதை ஆர்வமாக பார்வையிட்டு கைதட்டி ரசித்தார். அப்போது அவரிடம் சிறுவர்-சிறுமிகள் கை குலுக்கினார்கள்.

பின்னர் அவர், கொளத்தூர் ஹரிதாஸ் சாலையில் உள்ள தாமரை குள பூங்காவுக்கு சென்று சிறிது நேரம் இளைப்பாறினார். அனிதா அச்சீவர்ஸ் அகாடமியில் மாணவ-மாணவிகளுக்கு கம்ப்யூட்டர் பயிற்சி வகுப்புகள், தையற்பயிற்சி வகுப்புகள் நடைபெறும் இடத்தை பார்வையிட்டார்.

தமிழ்நாடு அரசின் நீர்வளத்துறை மூலம் சென்னை மாதவரம், அயனாவரம் வட்டத்தில் அமைந்துள்ள தணிகாசலம் கால்வாயை ரூ.91.36 கோடி மதிப்பீட்டில் அகலப்படுத்தி மேம்படுத்தும் பணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அப்போது அவருக்கு இந்த திட்டம் எவ்வாறு செயல்படுத்தப்படும் என்பது குறித்து வரைப்படம் மற்றும் செயல்முறை வடிவில் நீர்வளத்துறை அதிகாரிகள் விளக்கி கூறினார்கள்.

அடிக்கல் நாட்டிய சற்று நிமிடத்தில் இந்த பணியை முதல்-அமைச்சர் கொடி அசைத்து தொடங்கிவைத்தார். இதையடுத்து ஜே.சி.பி. எந்திரங்கள் இந்த கால்வாய் சீரமைப்பு பணியில் ஈடுபட்டன. இதைத்தொடர்ந்து முதல்-அமைச்சர், கொளத்தூர் நேர்மை நகரில் ரூ.2.50 கோடி மதிப்பீட்டில் உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறையின் கொளத்தூர் மண்டல உதவி கமிஷனர் அலுவலக கட்டுமான பணிக்கு அடிக்கல் நாட்டினார்.

கொளத்தூர் தொகுதிக்கு நேற்று வருகை தந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு தி.மு.க.வினரும், தொகுதி மக்களும் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

இந்த ஆய்வு பணியில் அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, சேகர்பாபு, சக்கரபாணி, பெருநகர சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, எம்.பி.க்கள் டாக்டர் கலாநிதி வீராசாமி, கிரிராஜன், எம்.எல்.ஏ.க்கள் தாயகம் கவி, சுதர்சனம், துணை மேயர் மகேஷ்குமார், உணவு பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு கமிஷனர் பூஜா குல்கர்னி, நகர் ஊரமைப்பு இயக்குனர் பா.கணேசன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

Tags:    

மேலும் செய்திகள்