சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

உயிரிழந்த காவலரின் குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும் என்று முதல்-அமைச்சர் தெரிவித்துள்ளார்.

Update: 2024-05-10 07:23 GMT

கோப்புப்படம் 

சென்னை,

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி அருகே சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை ஏவரப்பட்டி பகுதியில் நிகழ்ந்த சாலை விபத்தில் உயிரிழந்த காவலர் குடும்பத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டிருப்பதாவது:-

திருப்பத்தூர் மாவட்டம் நாட்டறம்பள்ளி வட்டம், சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலை, ஏலரப்பட்டி பகுதி அருகே நேற்று (09.05.2024) பிற்பகல் வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணிபுரிந்துவரும் காவலர் ஆறுமுகம்(வயது 43),  வாணியம்பாடி நோக்கி இருசக்கர வாகனத்தில் சென்றுகொண்டிருந்தபோது எதிரில் பெங்களூரு நோக்கி வந்துகொண்டிருந்த டாடா ஏஸ் வாகனத்தின் மீது எதிர்பாராதவிதமாக மோதிய விபத்தில் காவலர் ஆறுமுகம் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார் என்ற துயரகரமான செய்தியைக் கேட்டு மிகுந்த வருத்தமும் வேதனையுமடைந்தேன்.

இவ்விபத்தில் காவலர் ஆறுமுகம் உயிரிழந்துள்ளது தமிழ்நாடு காவல்துறைக்கும் அவரது குடும்பத்தினருக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். வாணியம்பாடி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவில் பணிபுரிந்துவரும் காவலர் ஆறுமுகத்தை இழந்து வாடும் குடும்பத்தினருக்கும் அவரது உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

பாதிக்கப்பட்ட காவலரின் குடும்பத்திற்கு அரசு நிவாரண உதவிகள் தேர்தல் ஆணையத்தின் அனுமதி பெற்று வழங்கப்படும். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tags:    

மேலும் செய்திகள்