அழகு முத்துக்கோன் சிலைக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மரியாதை..!
சுதந்திர போராட்ட வீரர் அழகுமுத்துக்கோனின் 313-வது பிறந்தநாள் விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது.;
சென்னை,
இந்திய சுதந்திர போராட்ட வீரர் மாவீரன் அழகு முத்துகோனின் 313-வது குருபூஜை விழா இன்று (செவ்வாய்க்கிழமை) கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சென்னை எழும்பூர் ரெயில் நிலையம் அருகே உள்ள அவரது சிலைக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். மேலும் சிலைக்கு கீழே அலங்கரித்து வைக்கப்பட்டுள்ள அழகு முத்துக்கோன் உருவப்படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார்.
இந்த நிகழ்ச்சியில் அமைச்சர்கள் கே.என்.நேரு, சேகர்பாபு, பொன்முடி, எ.வே.வேலு, சாமிநாதன், ராஜகண்ணப்பன், ரகுபதி, கீதா ஜீவன், மா.சுப்பிரமணியன் மற்றும் சென்னை மேயர் பிரியா ,நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இது குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள டுவிட்டர் பதிவில்,
"தமிழ்நிலத்தின் தலைவணங்கா வீரத்துக்கும் தலைசான்ற தியாகத்துக்கும் தன்னிகரற்ற அடையாளமாக விளங்கும் மாவீரர் அழகு முத்துக்கோனின் பிறந்தநாள். ஆங்கிலேய ஏகாதிபத்தியத்துக்கு எதிராக இந்தியாவின் பல பகுதிகளும் கிளர்ந்தெழுவதற்கு முன்பே அதைச் செய்து, விடுதலைப் போராட்ட வரலாற்றில் நீங்கா இடம்பிடித்த அழகு முத்துக்கோனின் வாழ்வும் போராட்டமும் என்றும் புகழ்மங்காது ஒளிவீசிடும்!" என்று பதிவிட்டுள்ளார்.