மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.1.81 கோடியில் கட்டிடங்கள் கட்டிய அப்பள வியாபாரி - நேரில் அழைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்

மதுரை மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.1 கோடியே 81 லட்சத்தில் கட்டிடங்கள் கட்டிய அப்பள வியாபாரியை அழைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

Update: 2023-08-17 20:14 GMT


மதுரை மாநகராட்சி பள்ளிகளுக்கு ரூ.1 கோடியே 81 லட்சத்தில் கட்டிடங்கள் கட்டிய அப்பள வியாபாரியை அழைத்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

சமூக சேவை

மதுரைக்கு நேற்று முன்தினம் வந்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், ரிங்ரோட்டில் உள்ள தனியார் ஓட்டலில் இரவு தங்கினார். நேற்று காலை அவர், அப்பள வியாபாரியான ராஜேந்திரனை (வயது 86) வரவழைத்து சால்வை அணிவித்து பாராட்டினார். ராஜேந்திரனுக்கு, கருணாநிதி சிலையை நினைவுப்பரிசாக வழங்கினார்.

முதல்-அமைச்சரிடம் பாராட்டு பெற்றவரான முதியவர் ராஜேந்திரன் சமூக சேவையில் ஆர்வம் கொண்டவர். மதுரை தத்தநேரி அவரது சொந்த ஊர் ஆகும்.

பள்ளிகளுக்கு கட்டிடங்கள்

திருப்பதி விலாஸ் என்ற பெயரில் அப்பளம், மிளகாய், வத்தல், வடகம் வியாபாரம் செய்து வருகிறார். மதுரை மாநகராட்சி திரு.வி.க. மேல்நிலைப்பள்ளிக்கு 10 வகுப்பறைகள், இறைவணக்க கூட்ட அரங்கம், இருசக்கர வாகனம் நிறுத்துமிடம் ஆகியவற்றை ரூ.1 கோடியே 10 லட்சம் செலவில் அமைத்து தந்துள்ளார்.

மதுரை மாநகராட்சி கைலாசபுரம் ஆரம்ப பள்ளிக்கு 4 வகுப்பறைகள், ஆழ்துளை கிணறு, உணவு அருந்தும் இடம், கழிப்பறைகள் ஆகியவற்றை 71 லட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் அமைத்துள்ளார். மதுரை மீனாட்சி அம்மன் கோவில் அருகில் உள்ள புது மண்டபத்தை பழமை மாறாமல் புதுப்பிக்கும் பணிக்கு ரூ.2 கோடி வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்து அவர் சமூக பணியில் ஈடுபட வேண்டும் என்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டினார்.

Tags:    

மேலும் செய்திகள்