முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்

முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ள சிறுமியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நலம் விசாரித்தார்.

Update: 2022-08-30 08:56 GMT

ஆவடியை அடுத்த வீராபுரத்தைச் சேர்ந்த ஸ்டீபன்ராஜ்- சவுபாக்கியம் தம்பதியரின் 9 வயது மகள் டேனியா. இவர் அரிய வகை முகச் சிதைவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளார். சிறுமியின் பெற்றோர் பல ஆண்டுகளாக பல்வேறு சிகிச்சை அளித்தும் இந்நோய் குணமாகவில்லை. தொடர்ந்து சிகிச்சை அளிக்க சிறுமியின் பெற்றோர்களிடத்தில் போதிய வசதியில்லாத காரணத்தினால், மகளின் முகச்சிதைவு நோய்க்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள உதவுமாறு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினிடம், கண்ணீர் மல்க கோரிக்கை வைத்தனர். அதை அறிந்தவுடன் மு.க.ஸ்டாலின், சிறுமி டேனியாவிற்கு அறுவை சிகிச்சை மேற்கொள்ள மாவட்ட நிர்வாகத்திற்கு உத்தரவிட்டார். அதன்படி, சவிதா மருத்துவக் கல்லூரியில் சிறுமிக்கு முகசீரமைப்பு அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது. இச்சிகிக்சைக்கு தேவையான அனைத்து உதவிகளும் திருவள்ளூர் மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழங்கப்பட்டன.

முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், சிறுமி டேனியாவை மருத்துவமனையில் நேற்று சந்தித்தார். அப்போது, அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்துள்ளது, எனவே எதைப் பற்றியும் கவலைப்பட வேண்டாம், விரைவில் பள்ளிக்கு செல்லலாம். உனக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்வோம் என்று தெரிவித்தார். வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மேற்கொண்ட மருத்துவர்களுக்கு அவர் பாராட்டுக்களை தெரிவித்தார். மகளின் மருத்துவச் சிகிச்சைக்கு உதவியதற்காக மு.க.ஸ்டாலினுக்கு, சிறுமி டேனியாவின் பெற்றோர் கண்ணீர் மல்க நெஞ்சார்ந்த நன்றி தெரிவித்தனர். உடன், அமைச்சர்கள், துரைமுருகன், கே.என்.நேரு, க.பொன்முடி, சா.மு.நாசர் மற்றும் மருத்துவர்கள் உடனிருந்தனர்.

Tags:    

மேலும் செய்திகள்