ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் வெற்றிபெற்ற காங்கிரஸ் கூட்டணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து
ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் வெற்றிபெற்ற தேசிய மாநாடு கட்சி-காங்கிரஸ் கூட்டணிக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
சென்னை,
ஜம்மு-காஷ்மீரில் மொத்தமுள்ள 90 தொகுதிகளுக்கு 3 கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது. இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. இதில், தேசிய மாநாடு கட்சி-காங்கிரஸ் கூட்டணி 49 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது. இதன் மூலம் இந்த கூட்டணி ஜம்மு-காஷ்மீரில் ஆட்சியை பிடித்துள்ளது. ஜம்மு-காஷ்மீர் முதல்-மந்திரியாக உமர் அப்துல்லா பதவியேற்பார் என தகவல் வெளியாகியுள்ளது.
இந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் தேர்தலில் வெற்றிபெற்ற தேசிய மாநாடு கட்சி-காங்கிரஸ் கூட்டணிக்கு தமிழ்நாடு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்திருப்பதாவது:-
அமோக வெற்றி பெற்ற தேசிய மாநாடு கட்சி-காங்கிரஸ் கூட்டணிக்கும், ஜம்மு & காஷ்மீர் மக்களுக்கும் வாழ்த்துகள்! இது இந்தியாவிற்கும் ஜனநாயகத்திற்கும் கிடைத்த வெற்றிக்கும் மேலானது. மத்திய பா.ஜ.க. அரசு அநியாயமாக பறித்த ஜம்மு காஷ்மீரின் கண்ணியம் மற்றும் மாநில அந்தஸ்தை மீட்டெடுப்பதற்கான அபிலாஷைகளை நிறைவேற்றுவதற்கான ஆணை இது.
இந்த தருணம் ஒவ்வொரு காஷ்மீரியின் நம்பிக்கையையும் மதிக்கும், எதிர்காலத்தை உள்ளடக்கிய நியாயத்தின் தொடக்கத்தை குறிக்கிறது. இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.