அவ்வை நடராசனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவு

மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராஜனுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.

Update: 2022-11-22 05:18 GMT



Full View

சென்னை,

தமிழ் அறிஞர், சிந்தனையாளர் என பன்முக திறமை கொண்டவர் அவ்வை நடராஜன். இவர் உடல்நல குறைவால் நேற்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 86.

பச்சையப்பன் கல்லூரியில் முதுகலை பட்டமும், 1958-ல் ஆராய்ச்சி பட்டமும், 1974-ல் முனைவர் பட்டமும் பெற்ற அவ்வை நடராஜன், தஞ்சையில் உள்ள மன்னர் சரபோஜி அரசு கல்லூரியிலும், மதுரை தியாகராஜர் கல்லூரியிலும் தமிழ் விரிவுரையாளராக பணியாற்றினார்.

பின்னர், டெல்லி அகில இந்திய வானொலி நிலையத்தில் செய்தி வாசிப்பாளராகவும், அறிவிப்பாளராகவும் இருந்தார். தொடர்ந்து சென்னையில் உள்ள ராமலிங்கர் பணி மன்றத்தின் செயலாளராக பணியாற்றினார். இவருடைய தமிழ் புலமையால் ஈர்க்கப்பட்ட அப்போதைய முதல்-அமைச்சர் கருணாநிதி, இவரை தமிழ்நாடு அரசின் செய்தி மக்கள் தொடர்புத்துறையில் துணை இயக்குனராகவும், தலைமை செயலகத்தில் மொழி பெயர்ப்புத்துறை இயக்குனராகவும் பணியமர்த்தினார்.

1984-ம் ஆண்டு முதல் 1992-ம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சி மற்றும் பண்பாட்டுத்துறை அரசு செயலாளராக பணியாற்றினார். ஐ.ஏ.எஸ். அதிகாரியாக இல்லாமல், அரசு துறை செயலாளராக நியமிக்கப்பட்டவர் இவர் ஒருவர்தான்.

பின்னர், 1992-ம் ஆண்டு முதல் 1995-ம் ஆண்டு வரை தஞ்சை தமிழ் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக இருந்தார். 2014-ம் ஆண்டில் செம்மொழி தமிழாய்வு மத்திய நிறுவனத்தில் துணைத்தலைவராகவும், 2015-ம் ஆண்டு முதல் சென்னையில் உள்ள பாரத் பல்கலைக்கழகத்தின் வேந்தராகவும் பணியாற்றிய பெருமைக்குரியவர்.

அவ்வை நடராஜனை கவுரவிக்கும் வகையில், மத்திய அரசு 'பத்மஸ்ரீ' விருதையும், தமிழக அரசு 'கலைமாமணி' விருதையும் வழங்கியிருக்கிறது. மேலும் இலங்கை கம்பர் கழகத்தின் 'தன்னேரில்லாத தமிழ் மகன் விருது', இலங்கை கொழும்பு கம்பன் கழகத்தின் 'கம்பன் புகழ் விருது', 'தினத்தந்தி' நாளிதழின் 'சி.பா.ஆதித்தனார் மூத்த தமிழறிஞர் விருது' உள்பட பல்வேறு விருதுகளை பெற்றவர்.

அவ்வை நடராஜன் நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று மரணம் அடைந்தார். சென்னை அண்ணாநகரில் உள்ள இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள உடலுக்கு அஞ்சலி செலுத்துவதற்கான ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

இன்று மாலை 3 மணிக்கு அவருடைய உடல் நல்லடக்கம் செய்யப்படுகிறது. அவ்வை நடராஜனுக்கு டாக்டர் கண்ணன், தமிழ் வளர்ச்சித்துறை இயக்குனர் அருள், டாக்டர் பரதன் என 3 மகன்கள் உள்ளனர்.

இந்தநிலையில் சென்னையில் உடல்நலக் குறைவால் காலமான தமிழறிஞர் அவ்வை நடராஜனுக்கு நேரில் சென்று முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மலை மாலை வைத்து அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து மறைந்த தமிழறிஞர் அவ்வை நடராஜனின் உடலுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செய்யப்படும் என முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

தமிழறிஞர் ஔவை நடராசன் அவர்களுக்கு காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த

தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிப்பில்,

மூத்த தமிழறிஞர் ஒளவை நடராசன் (87) அவர்கள் அகவை மூப்பின் காரணமாக இயற்கை எய்தியதை அடுத்து அன்னாரின் உடலுக்கு தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று காலை நேரில் சென்று அஞ்சலி செலுத்தினார்

பெருந்தகை ஒளவை நடராசன் அவர்களின் தமிழ்ப் பணிகளை கௌரவிக்கும் விதமாக காவல்துறை மரியாதையுடன் இறுதி அஞ்சலி செலுத்த ஆணையிட்டுள்ளார்.

இது தொடர்பாக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் டுவிட்டர் பதிவில்,

தமிழன்னையும் தேம்பி அழும் இழப்பு!தமிழாய்ந்த தமிழறிஞர் ஔவை நடராசன் நம்மைவிட்டு பிரிந்தார் எனும் துயர்மிகு செய்தியால் வாடி நிற்கிறோம். காவல்துறை மரியாதையுடன் அவரது இறுதி நிகழ்வுகள் நடைபெறும்.

தமிழுள்ள வரை அவரது புகழ் நம்மிடையே நிலைத்து நிற்கும்! என பதிவிட்டுள்ளார்.

Tags:    

மேலும் செய்திகள்