முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் 16-ந்தேதி டெல்லி பயணம்: பிரதமரை சந்தித்து மனு அளிக்க திட்டம்
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 16- ஆம் தேதி டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார்
சென்னை,
முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் வரும் ஆகஸ்ட் 16- ஆம் தேதி டெல்லிக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். செஸ் ஒலிம்பியாட் தொடக்க விழாவில் பங்கேற்றதற்கு நன்றித் தெரிவிக்கும் மு.க.ஸ்டாலின், தமிழகத்தின் நலன் சார்ந்த கோரிக்கைகளை பிரதமரிடம் எடுத்துரைக்க உள்ளதாகக் கூறப்படுகிறது.
அத்துடன், மத்திய அரசு தமிழகத்திற்கு வழங்க வேண்டிய நிலுவைத் தொகை உள்ளிட்ட கோரிக்கைகள் அடங்கிய மனுவையும் பிரதமரிடம் முதல் அமைச்சர் அளிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் புதிதாக பொறுப்பேற்றுள்ள ஜனாதிபதி திரவுபதி முர்மு, துணை ஜனாதிபதி ஜெகதீப்தன்கர் ஆகியோரையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவிக்க உள்ளார்
மு.க.ஸ்டாலினின் டெல்லி பயணத் திட்டம் விரிவாக தயார் செய்யப்பட்டு வருகிறது. இதற்கான முறையான அறிவிப்பு நாளை வெளியாகும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.