21 சட்ட முன்வடிவுகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்க வேண்டும் - கவர்னரிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் வலியுறுத்தல்
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட 21 சட்டசமோதாக்களுக்கு விரைவில் ஒப்புதல் தர கவர்னருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சென்னை.
தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்ட பல்வேறு தீர்மானங்கள் கவர்னருடைய உத்தரவுக்காக அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில் சென்னை, கிண்டியில் கவர்னர் ஆர்.என் ரவியை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் சந்தித்தார்.
இந்த சந்திப்பின் போது முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின் நிலுவையில் உள்ள பல்வேறு மசோதாக்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
21 சட்ட முன் வடிவுகளுக்கு ஒப்புதல் அளிக்க கவர்னர் ஆர்.என்.ரவியிடம் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
தமிழ்நாடு சித்த மருத்துவ பல்கலைக்க்ழக சட்ட முன்வடிவு 2022-க்கு விரைந்து ஒப்புதல் வழங்க வேண்டும் எனவும் அரசியல் சாசனத்தின் உணர்வையும் தமிழக மக்களின் விருப்பத்தையும் நிலைநிறுத்திடுமாறு முதல்-அமைச்சர் வலியுறுத்தி உள்ளார். நீட் விலக்கு கோரும் சட்ட முன்வடிவை ஜனாதிபதிக்கு அனுப்பியதற்காக கவர்னருக்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றி தெரிவித்தாக கூறப்படுகிறது.
மேலும் தமிழகத்தில் நிலவக்கூடிய சட்ட ஒழுங்கு குறித்தும் முதல் அமைச்சர் கவர்னருடன் கலந்தாலோசிப்பதாகவும் கூறப்படுகிறது. இந்த சந்திப்பில் அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி, தங்கம் தென்னரசு ஆகியோரும் உடன் இருந்தனர்.