முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரம் பயணம்-3 மாவட்டங்களில் கள ஆய்வு
முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று விழுப்புரம் செல்கிறார். அங்கு 3 மாவட்டங்களில் நடைபெறும் வளர்ச்சிப்பணிகளை அவர் களஆய்வு செய்கிறார்.
சென்னை,
கள ஆய்வில் முதல்-அமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்டம் தோறும் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டு வருகிறார்.இந்த திட்டத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களின் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து மு.க.ஸ்டாலின் ஆய்வு மேற்கொண்டார்.இன்று (புதன்கிழமை), நாளை (வியாழக்கிழமை) ஆகிய 2 நாட்கள் விழுப்புரம், கடலூர், கள்ளக்குறிச்சி ஆகிய 3 மாவட்டங்களின் வளர்ச்சி பணிகள் குறித்து ஆய்வு மேற்கொள்கிறார்.
இதற்காக அவர் இன்று காலை சென்னையில் இருந்து காரில் புறப்பட்டு மதியம் 12 மணிக்கு விழுப்புரம் செல்கிறார்.விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள சுற்றுலா மாளிகைக்கு செல்லும் அவர், அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார்.பின்னர் மாலை 4.30 மணிக்கு கலெக்டர் அலுவலகத்தில் விழுப்புரம், கள்ளக்குறிச்சி, கடலூர் ஆகிய 3 மாவட்ட விவசாயிகள் சங்க பிரதிநிதிகளுடன் கலந்துரையாடுகிறார். இதைத்தொடர்ந்து 3 மாவட்ட சிறு குறு தொழில் முனைவோருடன் பேசுகிறார்.
இரவு 7 மணிக்கு விழுப்புரம் சரக போலீஸ் டி.ஐ.ஜி. மற்றும் 3 மாவட்டங்களின் போலீஸ் சூப்பிரண்டுகள், துணை போலீஸ் சூப்பிரண்டுகள் ஆகியோருடன் சட்டம்-ஒழுங்கு நிலவரம் குறித்து ஆய்வு செய்கிறார். சட்டம்-ஒழுங்கு பாதுகாப்புக்காக மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து பல்வேறு அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்குகிறார். இதன்பின்பு, சுற்றுலா மாளிகைக்கு சென்று தங்குகிறார்.
நாளை (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு விழுப்புரம் கலெக்டர் அலுவலகத்தில் 3 மாவட்ட அரசுத்துறை அதிகாரிகளுடன் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், வளர்ச்சி திட்டப்பணிகள் குறித்து ஆய்வுக்கூட்டம் நடத்தி திட்டப்பணிகளின் முன்னேற்றம் குறித்து கேட்டறிவதோடு பணிகளை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டுவர தேவையான நடவடிக்கை எடுக்கும்படி அறிவுரைகளையும், ஆலோசனைகளையும் வழங்குகிறார்.முதல்-அமைச்சரின் ஆய்வு கூட்டத்தில் தலைமைச் செயலாளர் இறையன்பு, உள்துறை செயலாளர் பணீந்தரரெட்டி, டி.ஜி.பி. சைலேந்திரபாபு மற்றும் 60 ஐ.ஏ.எஸ்.அதிகாரிகள் கலந்து கொள்கிறார்கள். முதல்-அமைச்சரின் கள ஆய்வையொட்டி விழுப்புரத்தில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது